Soldiers dying is commen says BJP MP
ராணுவத்தில் வீரர்கள் சாவது சகஜமானது. எந்த நாட்டில் போரில் வீரர்கள் சாகாமல் இருக்கிறார்கள் என்று சர்ச்சையாகி உள்ளது.
தீவிரவாதிகள் தாக்குதல்
காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லேத்போரா பகுதியில், மத்திய ஆயுதப்படை போலீஸ் முகாம்மீது ஜெய்ஸ் இ முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள், நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர். இந்தச் சண்டையில் பாதுகாப்புப் படையினர் 4 பேர் பலியானார்கள். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கேள்வி
இந்நிலையில், இந்திய எல்லையில் ராணுவ வீரர்கள் உயிரிழக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறித்து உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த பா.ஜ.க எம்.பி நேபால் சிங்கிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
சாவது சகஜம்
அதற்கு பதிலளித்து நேபால் சிங் பேசியது, “ ஒரு சின்ன கிராமத்தில் சண்டை நடந்தாலே, குறைந்தபட்சம் ஒருவராவது காயம் அடைவார். அப்படியிருக்கும்போது எல்லையில் பணி அமர்த்தப்பட்டிருக்கும் ராணுவ வீரர்கள் சாவது சகஜம்தான். எந்த நாட்டிலாவது போரின்போது, ராணுவ வீரர்கள் சாகாமல் இருக்கிறார்களா?. வீரர்கள் சாகாமல் இருக்குமாறு ஏதாவது கருவி இருக்கிறதா?. எதிரிகளின் துப்பாக்கி குண்டுகளை தடுக்கும் ஒரு கருவியைக் கூறுங்கள்? ’’ எனப் பேசி இருந்தார்.
திடீர் பல்டி
இந்த கருத்துக்கு பலதரப்பில் இருந்து கடும எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, திடீர் பல்டி அடித்த எம்.பி. நேபால் சிங், தான் அவ்வாறு பேசவில்லை, தனது கருத்து திரித்துக் கூறப்பட்டு விட்டது என விளக்கம் அளித்துள்ளார்.
மன்னிப்பு கேட்ட எம்.பி.
இது குறித்து அவர் கூறுகையில், “ நான் ராணுவத்தின் மீது அதிகமான மதிப்பு ைவத்துள்ளேன். நான் அவமானப்படுத்தும் நோக்கில் அவ்வாறு கூறவில்லை. என் கருத்துக்கு நான் மன்னிப்பு கோருகிறேன். அறிவியல் வல்லுநர்கள் வீரர்களின் உயிரைக் காக்கும் கருவியை கண்டுபிடிக்க வேண்டும், அப்போதுதான் துப்பாக்கி குண்டுகளில் இருந்து தப்பிக்க முடியும் என்று கூறினேன், எனது கருத்து தவறாக எடுக்கப்பட்டுவிட்டது’’ எனத் தெரிவித்தார்.
