பா.ஜ.க.வுக்கு எதிரான விமர்சனம் வாயிலாக, ஒரே நாளில் பிரபலமாகியுள்ளார், தூத்துக்குடியை சேர்ந்த சோபியா. இவர், கனடாவில் தங்கி ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வருகிறார். சொந்த மண் தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்த போது, அதே விமானத்தில் வந்த, தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசையை பார்த்து, பாசிச பாஜக ஒழிக என்று கூறியுள்ளார். விமான நிலையம் வந்து இறங்கியதும், இதுதொடர்பாக கோஷமிட்டதால், இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, தமிழிசை அளித்த புகாரின் பேரில், போலீசார் சோபியாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவர் மீது, இந்திய குற்றவியல் சட்டம் 270, தமிழக குற்றவியல் சட்டம் 75 -1-C, 505 ஆகிய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், சோபியா மீதான 505 என்ற பிரிவை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

சோபியா மீதான  இ.பி.கோ. 75 பிரிவானது, பொது அமைதியை கெடுக்கும் வகையில் ஒருவர் நடந்து கொண்டால் இப்பிரிவின் கீழ் அந்நபர் மீது வழக்கு தொடரலாம் என்று தெரிவிக்கிறது. பொது இடத்தில் மது அருந்திவிட்டு பிரச்சனை செய்வோர், வன்முறையில் ஈடுபடுவோர், பிறரை தகாத வார்த்தையால் திட்டுவது ஆகியவற்றுக்கும், இச்சட்டத்தின் வழக்கு தொடர முடியும்.

அத்துடன், இந்த சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டால், அதிகபட்சமாக 6 மாதங்கள் சிறை தண்டனை அல்லது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது, சட்டத்தின் இப்பிரிவில் உள்ள விதிமுறையாகும்.