‘எம்.நடராஜன் கவலைக்கிடம் எனும் சேதி என்னை கொத்தி தின்கிறது. காலமகளே! என் அண்ணனை காப்பாற்று!’- என்று ட்விட்டரில் நாஞ்சில் சம்பத் உருகி ஓட, அதை வைத்து காட்டுத்தனமாக அவரை விமர்சிக்க துவங்கியுள்ளனர் தினகரன் மற்றும் எடப்பாடி அணி அ.தி.மு.க.வினர். 

அண்ணாவும், திராவிடமும் இல்லாததால் தினகரன் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் நாஞ்சில்சம்பத். ’இனி எந்த அரசியல்வாதியின் நிழலிலும் ஒதுங்க மாட்டேன். என் தாய் தமிழுக்கு தொண்டு செய்து கிடப்பதே இனி என் பணி. இலக்கிய மேடைகளில் என்னை காணலாம்!’ என்று அரசியல் துறவறம் கொள்வது போல் அறிவித்தார் சம்பத். 

அவர் பேசிய அந்த வார்த்தைகளின் ஈரம் கூட காயவில்லை அதற்குள், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு கவலைக்கிடமான நிலையிலிருக்கும் சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்காக உருகி மருகி ட்விட் செய்துள்ளார் நாஞ்சில் சம்பத்.

அவரது இந்த உருகலை கையிலெடுத்து விமர்சிக்க துவங்கியிருக்கும் அ.தி.மு.க.வினர், “சந்தர்ப்பவாதத்தின் உச்சம்தான் நாஞ்சில் சம்பத். தேய்ந்த ம.தி.மு.க.வில் பிழைப்புக்கு வழி அடைபட்ட போது ஜெயலலிதாவை ‘அம்மா ஆட்சி சூப்பர்’ என்று சொல்லி பாராட்டி பன்னீர்செல்வம் வழியாக அ.தி.மு.க.வினுள் நுழைந்து இன்னோவா பெற்றார். 

அம்மா இறப்பிற்கு பின் பசையுள்ள தினகரன் தரப்பை ஏற்றுக் கொண்டு பன்னீரை வசைமாரி பொழிந்தார். எடப்பாடியாரையும் ‘டெண்டர் ஆட்சி நடத்துகிறார்’ என்று குத்திக் கிழித்தார். 

தினகரனிடம் இவர் எதிர்பார்த்த ஏதோ ஒன்று கிடைக்காத நிலையில் அவரிடமிருந்து கழன்று கொண்டுவிட்டு இலக்கியமே என் மூச்சு! என்றார். ஆனால் அடுத்த நாளே நடராஜனுக்காக உருகியிருக்கிறார். நடராஜன் என்ன பெரும் இலக்கிய புலவரா? எங்க கட்சியின் நிழல் அதிகார மையம்தானே அவர். சசிகலாவின் கணவர், தினகரனின் சித்தப்பா என்று பெரும் அதிகாரம் வியாபித்திருக்கும் நபர். அவருக்காக இவர் உருகுவதிலிருந்தே புரியவில்லையா இன்னும் அரசியல் அதிகார நிழலைத்தேடித்தான் நாஞ்சில் சம்பத் ஓடிக் கொண்டிருக்கிறார் என்று?” என்று கேட்டிருக்கிறார்கள். 

தினகரன் அணியினரும் வசைமாரி பொழிய துவங்கியுள்ளனர் நாஞ்சில் சம்பத் மீது ‘இப்படி மறைந்து நின்று அரசியல் ஆதாயம் தேடுவதற்கு பதிலாக நேரடியாக தினகரனிடமே, தன் தேவையை சொல்லி லாபம் பார்த்துக் கொள்ளலாமே!’ என்கின்றனர். 

இந்த வெந்நீர் விமர்சனங்களால் வெறுத்துப் போன நாஞ்சில் சம்பத்தோ ‘நடராஜன் எனக்கு சகோதரர். அரசியலைதான் நான் வெறுத்துள்ளேனே தவிர அதன் மூலம் கிடைத்த நண்பர்களுக்கு, சகோதரர்களுக்கு ஒரு கவலையென்றால் அதில் பங்கேற்க கூடாதா? இது என்ன பைத்தியக்காரத்தனமான பேச்சாக இருக்கிறது!” என்று பொரிந்து தள்ளுகிறார்.