கஜா புயலில் ஏற்பட்ட மின்சேதத்தை சீரமைத்தல் உள்பட பல்வேறு காரணங்களால் மின்சார வாரியம் கடும் நிதிநெருக்கடியில் சிக்கி தவிப்பதால் கட்டணங்களை உயர்த்த முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளனர். 

நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக பதிவுக்கட்டணம், மின் இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், ஆரம்ப மின்பயன்பாடு உள்ளிட்ட பல கட்டணங்கள் அடங்கிய மின் இணைப்புக்கான தொகையை உயர்த்த மின் வாரியம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மனு அளித்த மின்சார வாரியம் வைப்பு தொகை ரூ.1,600 என்று நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ரூ.4 ஆயிரத்து 600 ஆக மாற்றி அமைக்கும்படி கூறி இருந்தது.

இந்த நிலையில் இந்த மனு குறித்து விவாதிப்பதற்காக தமிழக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மாநில ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மின்சார வாரியம், தொழில், வணிகம், நுகர்வோர், கல்வி என பல்வேறு துறைகளை சேர்ந்த குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மின்வார வாரியத்தின் நிதி நெருக்கடி குறித்தும், மின்சார இணைப்புக்கான டெபாசிட் தொகையை உயர்த்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதற்கு குழு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறுகையில், ’’மின்சார வாரியத்துக்கு இயற்கை பேரிடர் போன்ற பல்வேறு காரணங்களால் இழப்பு அதிகமாகி வருகிறது. இதனை சரி செய்ய மின்சார இணைப்புக்கான டெபாசிட் தொகையை உயர்த்துவது குறித்து விவாதித்தோம். கட்டண உயர்வு குறித்து பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்களிடமும் விரைவில் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்த திட்டமிட்டு உள்ளோம்.

கட்டண உயர்வை பொருத்தவரையில் ஒரு கிலோ வாட் திறன் கொண்ட இணைப்புக்கான வைப்பு தொகை ரூ.200-ல் இருந்து ஆயிரம் ரூபாயாகவும், மும்முனை இணைப்புக்கு ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.600 முதல் ரூ.1,800 வரை உயரும். அதேபோல் வீடுகளுக்கு மின்சார இணைப்புகளுக்கான பதிவு மற்றும் செயலாக்க கட்டணம் ரூ.50-ல் இருந்து ரூ.400 வரை உயரும். வைப்பு தொகையில், புதிய தொழில்துறை பிரிவுகளுக்கு குறைந்த மின் அழுத்த பகுதிக்கு ஒரு கிலோவாட்டிற்கு ரூ.600-ல் இருந்து ரூ.2 ஆயிரம் ஆக மாற்றப்படுகிறது. அதிக மின்அழுத்த பகுதி நுகர்வோர்களுக்கு புதிய விகிதப்படி ஒரு கிலோவாட் ஆம்பியருக்கு ரூ.800-ல் இருந்து ரூ.3 ஆயிரத்து 100 ஆக இருக்கும்.

மின்இணைப்பு வழங்குவதற்கு நுகர்வோர்கள் இடத்தில் மின்சார அமைப்பை ஆய்வு செய்து சோதனை செய்வதற்கு தற்போது வரை கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால், இனிமேல், ஒரு முனை இணைப்புக்கு (சிங்கிள் பேஸ்) ரூ.580-ம், மும்முனை இணைப்புக்கு ரூ.1,920 கட்டணம் வசூலிக்கப்படும். 18.3 கிலோ வாட்டுக்கு மேல் இருக்கும் உயர்மின் அழுத்த வகையை பொறுத்தவரை ரூ.3 ஆயிரத்து 810 ஆக இருக்கும். இந்த கட்டண உயர்வு குறித்து திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை இறுதி செய்யப்படவில்லை’’ எனக் கூறுகின்றனர்.