கொரோனா எதிரொலியாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள 10 ,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறிதி தேர்வு சட்டமன்ற தேர்தல் முடிந்தபிறகே நடத்தப்படலாம் என கூறப்படுகிறது.  இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர். நாடு முழுதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதன் எதிரொலியாக கடந்த மார்ச் முதல் பள்ளி கல்லூரிகள் செயல்பட தடை விதிக்கப்பட்டது. 

இந்நிலையில் வைரஸ் ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கல்வி  நிறுவனங்களின் தொடர் கோரிக்கை வைத்ததன் காரணமாக அரசு, அனைத்து வகையான கல்லூரிகளையும் திறக்க அனுமதி வழங்கி உள்ளது. இந்நிலையில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஆனால் அங்கங்கே இன்னும் கொரோனா தொற்று உள்ளதாலும், பண்டிகை காலம் என்பதாலும், பள்ளிகள் திறப்பு தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு தேதி நவம்பர் மாதத்தில் அறிவிக்கப்பட்டு திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டுவது வழக்கம். 

 

ஆனால் இந்த முறை தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளதால், அப்போதும் மாணவர்களுக்கான தேர்வை நடத்த முடியாது என்ற நிலை உள்ளது. எனவே ஒரேயடியாக  சட்டமன்ற தேர்தல் முடிந்ததும், ஜூன் மாதம் மேற்கண்ட வகுப்புகளுக்கு தேர்வு நடத்திக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை தமிழக சுகாதாரத்துறை, உயர் கல்வித்துறை, மற்றும்  மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசித்து இறுதி முடிவெடுக்க உள்ளதாகவும், முதல்வரின் ஒப்புதல் கிடைத்தவுடன் அதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும்  உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.