சட்டசபை கூட்டத்தொடரை திமுக வழக்கம்போலவே சண்டை களமாக மாற்ற முயற்சித்தால் தமிழகத்து மக்கள் திமுக ஒரு திருந்தாத தண்டத்து கட்சி என்ற முடிவுக்கு தான் வருவார்கள் என அதிமுக நாளிதழான நமது அம்மா, மு.க.ஸ்டாலினை விமர்சித்துள்ளது. 

சட்டசபை கூட்டத்தொடரும் சட்டை கிழிப்பு சாதனையாளரும் என்கிற தலைப்பில் நமது அம்மா நாளிதழ் கட்டுரை இன்றை வெளியிட்டு இருக்கிறது. 

அதில், சட்டசபையை கூட்டி தண்ணீர் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் முழங்கி இருக்கிறார். அது சரி, அப்படியே சட்டசபையை கூட்டிட்டா அதிகபட்சமா திருவாளர் துண்டுச்சீட்டு என்ன பண்ணுவாரு? சறுக்கியது சாக்குன்னு கண்டதையும் காரணமாக்கி வெளிநடப்பு செய்வாரு, பத்திரிக்கையாளர்களை கூட்டி வைச்சு ஒப்புக்கு ஒரு காரணம் சொல்லிபுட்டு உல்லாச காரில் ஓய்வெடுக்க போயிடுவாரு. அதுக்கு மேலயும் உச்சகட்டமாக நாட்டுக்கு ஏதாவது செய்யனும்னா தன் சட்டையை தானே கிழிச்சிக்கிட்டு தமிழகமே பார் என்று கட்டுக்கதை கட்டி கழக அரசை பழிக்க திட்டங்கள் தீட்டுவாரு. 

இதைத் தவிர கடந்த காலங்களில் சட்டசபைக்கு வந்து இவர் தலைமையிலான திமுக ஆற்றிய தொண்டு என்ன என்று பார்த்தால் அதிகபட்சமாக சபாநாயகரை பார்த்து இவரது தொண்டரடி பொடியாழ்வார்கள் அசிங்கமாக சைகை காட்டுவார்கள். சபாநாயகர் இருக்கைக்கே வந்து அதில் ஏறி உட்கார்ந்து சபையின் கண்ணியத்தை குழி தோண்டி புதைப்பார். 

இவற்றை தவிர ஒரு சட்டசபை கூட்டத் தொடரிலும் ஆக்கப்பூர்வ விவாதங்களை திமுக செய்ததே கிடையாது. இப்போது தண்ணீர் பிரச்சினை என்கிறார்கள். சத்திய நாராயணா சகோதரர்களை சாகடித்து ஊழலுக்கு மட்டுமே வித்திட்ட இவர்களின் பழைய வீராணம் திட்டத்தை புதிய வீராணம் திட்டமாக்கி தலைநகர் சென்னையின் தாகம் தீர்த்தது எங்கள் தாயின் அரசு தான்.

 

அதனால், சட்டசபையை கூட்டினாலும், அங்கே வந்து கழக அரசுக்கு பாராட்டு தீர்மானத்தை தான் திமுகவுக்கு மனசாட்சி ஒன்று இருந்தால் வாசித்து போக வேண்டும். அதை விடுத்து சட்டசபை கூட்டத்தொடரை திமுக வழக்கம்போலவே சண்டை களமாக மாற்ற முயற்சித்தால் தமிழகத்து மக்கள் திமுக ஒரு திருந்தாத தண்டத்து கட்சி என்ற முடிவுக்கு தான் வருவார்கள்’’  என கடுமையாக விமர்சித்துள்ளது.