ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்ப ஆசைப்படாதீங்க அண்ணாமலை, அது உங்கள் முகத்தில் தான் விழும் - சினேகன் பதிலடி
கமல்ஹாசன் அமெரிக்காவில் போய் அரசியல் பேசுவதாக விமர்சித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கவிஞர் சினேகன் பதிலடி கொடுத்துள்ளார்.
நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது அங்கு தன் நற்பணி மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். அதில் அவர் அரசியல் பற்றியும் பேசி இருந்தார். இதைப்பார்த்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கமல்ஹாசன் அமெரிக்காவில் போய் அரசியல் பேசுவதாக விமர்சித்து இருந்தார்.
இதற்கு கவிஞரும், மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகியுமான சினேகன் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியுள்ளதாவது : “வணக்கம் அண்ணாமலை சார். எங்க தலைவர் அமெரிக்காவில் அரசியல் பேசுவதாக சொல்லியிருக்கிறீர்கள். அவர் லாஸ் ஏஞ்சல்ஸிற்கு சொந்த காசில் போனார். நீங்கள் எந்த காசுல போயிருக்கீங்கனு எங்களுக்கு தெரியாது.
அவர் அமெரிக்காவுல இருந்து அரசியல் பேசுகிறார் என்றால் இப்போ நீங்க எங்க இருந்து பேசுறீங்க. லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்கால இருக்குனா, கலிபோர்னியா கரூருக்கு பக்கத்துல இருக்கா என்ன. அவர் அங்கு போனதற்கு காரணம் தன் துறை சார்ந்து மேல் படிப்புக்கு போனார். போன இடத்தில் எங்கள் நற்பணி மன்ற தோழர்களைப் பார்த்து அரசியலும் பேசி இருக்கிறார், நல்ல விஷயங்களையும் பேசி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... ஆட்டை கடித்து, மாட்டை கடித்து ஆளைகடிக்கும் அண்ணாமலை... நம்மவரை அமெரிக்காவில் அசிங்கப்படுத்துவியா. மநீம.
அவர் ராஜராஜனை பற்றி இவ்வளவு காலம் கழித்து பேசுகிறார் என கிண்டலடித்து இருக்கிறீர்கள். அன்றைக்கு தான் அவர் பொன்னியின் செல்வன் படம் பார்த்தார். பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்னார், உண்மை வரலாறை சொன்னார். இந்த வரலாறு இன்று நேற்றல்ல, ஆதி சங்கரர் சொன்னது. காஞ்சி பெரியவர் சொன்னது, எழுத்தாளர் சோ சொன்னது. எல்லவற்றையும் நினைவுபடுத்த வேண்டிய இடத்தில் எங்கள் தலைவர் இருக்கிறார்.
யார் வரலாறு பேசினாலும் அமைதியாக இருக்கும் நீங்கள், நாங்கள் வரலாறு பேசினால் மட்டும் ஏன் இந்த ஆட்டம் ஆடுகிறீர்கள். அரசியலை விட்டுவிட்டு தொழிலுக்கு சென்றுவிட்டார் என்கிறீர்கள். நீங்களும் தான் ஒருமுறை சொன்னீர்கள், அரசியல் சரியில்லை என்றால் நான் ஆடு மாடு மேய்க்க போய்விடுவேன் என்று.
அவர் அரசியலும் செய்கிறார், தொழிலையும் பார்க்கிறார். காரணம், அரசியல் கட்சி நடத்துவதற்கு பணம் தேவைப்படுகிறது. மேலிருந்தும், கீழிருந்தும்.. கருப்பாகவும், வெள்ளையாகவும் கொட்டிக்கொடுக்க எங்களுக்கு யாரும் இல்லை. அப்படி கொடுத்தாலும் நாங்கள் வாங்குபவர்கள் அல்ல. இதனால் தான் தொழிலையும் பார்க்கிறோம், அரசியலும் செய்கிறோம். இனியாவது ஒருவரை விமர்சனம் செய்வதற்கு முன்பு, பகுத்து ஆய்ந்து பேசுங்கள், அதுதான் படித்தவர்களுக்கு நல்லது. ஆகாயத்தை பார்த்து எச்சில் துப்ப ஆசைப்படாதீர்கள் அது உங்கள் முகத்தில் தான் விழும்” என கூறியுள்ளார் சினேகன்.
இதையும் படியுங்கள்... அடித்து சொல்றேன் ரூ.12,000க்கு கழிவறையை கட்ட முடியாது... அண்ணாமலை பேசியது குறித்து திமுக எம்.பி. விமர்சனம்!!