மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 288 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், சிவசேனா 56 இடங்களிலும் வென்றன. சிவசேனா-பாஜக கூட்டணிக்குப் பெரும்பான்மைக்குத் தேவையான 145 இடங்களுக்கும் மேலான எம்எல்ஏக்கள் இருந்தபோதிலும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது.

ஆட்சி அதிகாரத்தில் சமபங்கு கேட்டு சிவசேனா கட்சி பிடிவாதம் செய்து வருகிறது. ஆனால், எந்தவிதமான வாக்குறுதியும் அளிக்கவில்லை. முதல்வர் பதவியைத் தாரை வார்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று பாஜக திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 


மாநில சட்டப்பேரவையின் காலம் நாளை முடிவடைய இருப்பதால் பாஜக தலைமையிலான குழு இன்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர இருப்பதாகத் தகவல் வெளியானது. 

ஆனால், இன்று ஆட்சி அமைக்கக் கோரப் போவதில்லை என்று பாஜக சார்பில் பின்னர் அறிவிக்கப்பட்டது.சிவசேனா கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் மாதோஸ்ரீ இல்லத்தில் இன்று பிற்பகல் நடந்தது. இதில் அனைத்து எமஎல்ஏக்களும் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அந்தக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு அளித்து தீர்மானம் நிறைவேற்றினர். இந்த சூழலில் சிவசேனாவின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:


''மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் விஷயத்தில் பாஜக தாமதம் செய்து வருகிறது. மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டமிடுகிறது. தங்களால் மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியவில்லை என்று பாஜக அறிவிக்கட்டும். அதன்பின் சிவசேனா செய்வதைப் பாருங்கள். மிரட்டல் விடுப்பது எங்களிடம் பலிக்காது. எங்களுக்கும் பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன.இந்த மாநிலத்தின் முதல்வர் சிவசேனா கட்சியில் இருந்துதான் வரவேண்டும். 

சட்டப்பேரவையில் எண்ணிக்கை எவ்வளவு தேவை என்பது தெரியும். எங்களிடம் தேவையான ஆதரவு இருக்கிறது.ஆளுநரைச் சந்திக்க இருந்த பாஜக தலைவர்கள் ஏன் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவில்லை. ஏன் சந்தித்துவிட்டு வெறுங்கையுடன் திரும்பினார்கள். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளார்கள். 

பாஜகவிடம் ஆட்சி அமைக்கப் போதுமான எம்எல்ஏக்கள் எண்ணிக்கையும் இல்லை.எங்கள் கட்சியின் எம்எல்ஏக்கள் பலருக்கும் வீடு மும்பையில் இல்லை. அனைத்து எம்எல்ஏக்களும் ஒரே இடத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரே ஹோட்டலில் தங்கவைத்துள்ளோம். 

சிவசேனாவின் நிலைப்பாட்டில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. சிவசேனாவில் இருந்துதான் முதல்வர் வருவார். அனைத்து எம்எல்ஏக்களும் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு அளித்துள்ளார்கள்.சிவசேனாவைப் பொறுத்தவரை வாக்கு மிகவும் முக்கியம். வாழ்க்கையைக் காட்டிலும் எங்களுக்கு வாக்குறுதி மிகவும் முக்கியம்.


சிவசேனா நிச்சயம் 145 எம்எல்ஏக்கள் ஆதரவை வெளிப்படுத்தி ஆட்சி அமைக்கும். மக்கள் எங்களுக்கு அளித்த வாக்கில் சிவசேனாவில் இருந்து ஒருவர் முதல்வராக வரவேண்டும் என்றுதான் விரும்பி வாக்களித்துள்ளார்கள்''.இவ்வாறு ராவத் தெரிவித்தார்.