எதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறேன் என மக்களிடம் கேள்வி கேட்டு தர்மசங்கடத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் சிக்கிக்கொள்வது வாடிக்கை. அந்த ஒரு நிலைமை மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணிக்கும் ஏற்பட்டது. காங்கிரஸை விமர்சிப்பதாக எண்ணி பல்பு வாங்கிக்கொண்டார்.

 
ஸ்மிருதி இராணி போட்டியிட்ட அமேதி தொகுதியில் தேர்தல் முடிந்துவிட்டதால், தற்போது தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டுவருகிறார். மத்திய பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். மத்திய பிரதேசத்தில் 15 ஆண்டுகளாக இருந்த பாஜக ஆட்சியை வீழ்த்தி காங்கிரஸ் கடந்த ஆண்டு இறுதியில் ஆட்சியைப் பிடித்தது. எனவே, காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியை வைத்து அசோக் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கேள்வி எழுப்பினார் ஸ்மிருதி.


பெரும்பாலும் பாஜக தொண்டர்கள் குழுமியிருந்த அந்தப் பிரசாரக் கூட்டத்தில், “தேர்தலில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம் எனக் கூறினார்கள். அவர்கள் செய்தார்களா? உங்களுடைய கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா?” என்று வாக்காளர்களை நோக்கி கேள்வி எழுப்பினார்.  கூட்டத்தில் கூடியிருந்த பெரும்பாலானோர், “ஆமாம்,  எங்களுடைய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என கோஷமிட்டார்கள். கூட்டத்தினரிடையே இருந்து வந்த பதிலால் அதிர்ச்சியடைந்த ஸ்மிருதி இராணி, அடுத்த கேள்வியைக் கேட்காமல் அப்படியே நிறுத்திக்கொண்டார்.


இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இதை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் ட்விட்டரில் வெளியிட்டு, ஸ்மிருதியை விமர்சனமும் செய்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சி, முதல் கையெழுத்தாக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.