மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை ஒட்டி ஆர்.கே.நகர் தொகுதி சுயேச்சை MLA தினகரன் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “டெல்லியின் விருப்பத்தை முறியடிக்கும் விதமாக ஜெயலலிதாவின் அடுத்த பிறந்தநாளில் தமிழகத்தில் உண்மையான அம்மா அரசு இருக்கும் என்று கூறியுள்ளார்.

அதேகடிதத்தில், “ஜெயலலிதா தனது மாநிலங்களவையில் பேசிய முதல் பேச்சுக்காக அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் பாராட்டுதல்களைப் பெற்றவர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னால் கழகம் பிளவுப்பட்டபோது, தொண்டர்கள் மற்றும் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவினைப் பெற்று புரட்சித் தலைவரின் வாரிசு, புரட்சித் தலைவி அம்மா தான் என்ற அங்கீகாரத்தைப் பெற்று, கழகத்தை ஒன்றிணைத்து இழந்த சின்னத்தை மீட்டதோடு, இழந்த புரட்சித் தலைவரின் ஆட்சியையும் மீண்டும் நிலைநாட்டியவர் இதயதெய்வம் அம்மா.

மக்களுக்கு நன்மை செய்திடவும், அதற்கு முரணான வகையில் செயல்படும் எந்த சக்தியையும் வீழ்த்திடவே நம் அம்மா நம்மை பயிற்றுவித்தார்கள். மக்கள் வாழ்வில் பல நலத்திட்டங்களை சிந்தித்து, அதன் வாயிலாக அவர் ஏற்றி வைத்த திருவிளக்கு இன்று எத்தனையோ குடும்பங்களை வறுமையின் பிடியிலிருந்து மீட்டு வாழவைத்துக் கொண்டிருக்கிறது.

இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பேரியக்கமாக அ.தி.மு.க.வை நிலைநிறுத்திய பெருமை அம்மாவையே சாரும். அவரது பேராற்றலையும், ஆட்சி முறையையும் கண்டு பல உலக நாட்டுத் தலைவர்கள் வியந்து போற்றிப் புகழ்ந்த பேராளுமையாக அம்மா திகழ்ந்தார்’’ என்று குறிப்பிட்டவர், இன்றைய அதிமுக அரசின் நிலையையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

“அம்மாவின் ஆட்சியில் தமிழகம் என்றாலே மற்றவர்களுக்கு மரியாதையும், மதிப்பும் ஏற்பட்டது. ஆனால் இன்றோ அத்தனை சிறப்புகளையும் இழந்து, நம் அம்மா கம்பீரத்தோடு நிலைநாட்டிய தமிழகத்தின் பெருமையையும், கழகத்தின் சிறப்பையும் டெல்லியிடம் அடிமைசாசனமாக எழுதிக் கொடுத்துவிட்ட கொடுஞ்செயலை தகர்த்தெறிந்து தரைமட்டமாக்கும் புரட்சியின் காலம் இது.

அடிமைத் தன அரசியலையும் அடிமைத் தன ஆட்சியையும் நடத்திக் கொண்டிருக்கும் இன்றைய துரோகிகள் கூட்டத்தின் பிடியில்தான் அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் இருக்க வேண்டும் என்பது டெல்லியின் விருப்பம். அதையே அவர்கள் நிறைவேற்றியுள்ளார். இதை நீதியின் வழி நின்று அம்மாவின் வழியில் வென்றெடுப்போம்.

அடுத்த ஆண்டு நம் அம்மாவின் 71-வது பிறந்த நாளை கொண்டாடும் வேளையில் அம்மா நிறுவிக்காட்டிய உண்மையான மக்கள் அரசை, யாருக்கும் மண்டியிடாத அரசை, வளமான தமிழர் வாழ்வை, தலைநிமிர்ந்த தமிழகத்தை அமைத்துக்காட்ட சபதம் ஏற்றிடுவோம்’’ என்று தன் கடிதத்தை முடித்துள்ளார்.