slipper thrown man nominate in rk nagar
சேலம் அரிசிபாளையம் பாவேந்தர் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (29). டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
கடந்த 13ம் தேதி முத்துகிருஷ்ணன், தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் 16ம் தேதி சேலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
அப்போது மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இறந்த முத்துகிருஷ்ணனுக்கு அஞ்சலி செலுத்த வந்தார்.

அப்போது, அங்கிருந்த ஒரு வாலிபர், திடீரென அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பை வீசினார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த வாலிபரை மடக்கி பிடித்து, கைது செய்தனர்.
பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில், திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரத்தை சேர்ந்த சாலமன் (29). இந்திய மக்கள் முன்னணி மாநில அமைப்பாளர் என தெரியவந்தது. இதையடுத்து சாலமனை கைது செய்த போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், ஆர்கே நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக, அதிமுகவின் 3 அணிகள், பாஜக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக உள்பட பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் போட்டியிடுகின்றனர்.

இதையொட்டி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பை வீசி சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாலமன், இந்திய மக்கள் முன்னணி சார்பில் ஆர்கே நகர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனுவில் சாலமனின் கையெழுத்து பெறுவதற்காக, சாலமனின் அண்ணன் வழக்கறிஞர் சந்தோஷம் மற்றும் சில வழக்கறிஞர்கள் சேலம் சிறைக்கு சென்றனர். அங்கு சிறைத்துறை அதிகாரிகள் முன்னிலையில் சாலமன் வேட்புமனுவில் கையெத்திட்டார்.
இதுகுறித்து சந்தோஷம் கூறுகையில், எனது தம்பி சாலமன் மீது இலங்கை தமிழர் போராட்டத்தின் போது பஸ் எரித்ததாக பொய் வழக்குப்பதிவு செய்தனர். தலித் மக்கள் மீது இருக்கும் உணர்வால் பொன்.ராதாகிருஷ்ணன் மீது சாலமன் செருப்பு வீசினார்.
இந்திய மக்கள் முன்னணி அமைப்பு சார்பில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சாலமன் போட்டியிடுகிறார். அவரிடம் வேட்பு மனுவில் கையெழுத்து பெற்றுள்ளோம். வேட்பு மனு தாக்க செய்வோம் என்றார்.
