Sleeper Cells in the DMK
சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தினால் திமுக எம்எல்ஏக்கள் 40 பேர் எங்களுக்கு சாதகமாக இருப்பார்கள் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அதிமுகவின் 46-வது ஆண்டு தொடக்கவிழா பொதுக்குழு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஜெயலலிதா இருந்தபோது, அப்போதைய நிதி அமைச்சர் பன்னீர்செலவத்திடம் ஆலோசனை பெற்றுச் செல்லுமாறு அமைச்சர்களிடம் கூறுவார். அந்த அளவுக்கு அவர் மீது ஜெயலலிதா நம்பிக்கை வைத்திருந்தார்.
அதிமுக 46 வயது இளைஞர் என்றும் திமுக 70 வயது முதியவர் என்றும் கூறிய அவர், எங்களுடன் திமுக மோதினால் தவிடு பொடியாகிவிடும் என்றும் கூறினார். மேலும் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஜாதகத்தில் முதலமைச்சராகும் யோகம் கிடையாது என்றார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியபடி, தமிழகத்தில் 100 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதலமைச்சர் ஆகியோர் நடத்துவார்கள் என்று கூறினார்.
மு.க.ஸ்டாலின் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதை திமுக எம்எல்ஏக்கள் விரும்பவில்லை. மீறி ஓட்டெடுப்பு நடத்தினால் திமுக எம்எல்ஏக்கள் 40 பேர் எங்களுக்கு சாதகமாக இருப்பார்கள் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
