இது தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான  சாம்னாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்குகளைக் கவர வேண்டும் என்பதற்காக மக்களிடம் ஏராளமான பொய்யான வாக்குறுதிகளை அளிக்கின்றன. ஆனால், அவை அனைத்தும் ஆட்சிக்கு வந்தபின் நிழல்வாக்குறுதிகளாக மாறிவிடுகின்றன.

இதுபோன்ற ஒழுக்கநெறிமுறைக்கு மாறாக வாக்குறுதி அளிக்கப்படுவதைத் தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும்  மக்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு இல்லாவிட்டால் புரட்சி வெடித்துவிடும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையர் ஜே.எஸ். சஹாரியா சமீபத்தில் கூறுகையில், தேர்தல் நேரத்தில் அளிக்கப்படும் வாக்குறுதிகளை அரசியல் கட்சிகள் நிறைவேற்றாமல் இருந்தால் வாக்குறுதி அளித்த அரசியல் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குறுதியைத் தேர்தல் ஆணையமும் நிறைவேற்ற வேண்டும் என குறிப்டப்பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு அரசியல் கட்சிகள் அளித்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்தி விட்டதா என்பதை தேர்தல் ஆணையமும் கவனித்து தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் மோடி ஏராளமான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தார். பாகிஸ்தான் ஆக்கிமிரப்பு காஷ்மீரை மீட்பேன், கறுப்புப்பணத்தை இந்தியாவுக்குக் கொண்டுவருவேன், ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வேன் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார்.

ஆனால் இப்போது இது குறித்து மோடியிடம் யாரேனும் சென்று நீங்கள் அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆயிற்று என்று கேட்டால், அவர்கள் மீது தேசத் துரோகி முத்திரை குத்தப்படுகிறது என சிவசேனா கடுடையாக மோடியை விமர்சித்துள்ளது..