மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்துவரும் நிலையில், சிவசேனா கட்சித் தலைவர்கள் சரத்பவாரை சந்தித்து பேசியிருப்பது அந்த மாநிலத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவும் சிவசேனாவும் ஒரே கூட்டணியில் இருந்தாலும், இரு கட்சிகளுமே கடந்த ஐந்து ஆண்டுகளாகவே தேனிலவில் பயணிக்கவில்லை. வாஜ்பாய், அத்வானி காலத்தில் மகாராஷ்டிராவில் முதல்வர் பதவி சிவசேனாவுக்குதான் வழங்கப்படும். பாஜக அமைச்சரவையில் பங்கேற்கும். ஆனால், மோடி, அமித்ஷா காலத்தில் இது தலைகீழாக மாறிவிட்டது. இந்தத் தேர்தலில் கூட கூட்டணி அமைப்பதற்குள் இரு கட்சிகளுக்கும் போதும்போதும் என்றாகிவிட்டது.


ஒரு வழியாக கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தபோதும் சுழற்சி முறையில் முதல்வர் பதவி, அமைச்சரவையில் 50 சதவீத இடங்கள் என நிபந்தனைகள் விதித்து பாஜகவை சிவசேனா திணறடித்துவருகிறது. இந்த விஷயத்தில் இரு கட்சிகளும் முரட்டி பிடிவாதத்தில் இருப்பதால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிவசேனாவிலிருந்து எம்.எல்.ஏ.க்களை தூக்குவோம் என்று பாஜக எம்.பி. ஒருவர் பேசிய பிறகு சிவசேனா தரப்பு கடுப்பில் உள்ளது. இரு கட்சிகளுக்கும் உரசல் ஏற்பட்டுள்ள நிலையில், இதைப் பயன்படுத்திக்கொண்ட சரத்பவார், சிவசேனா ஆட்சி அமைக்க ஆதரவு அளிக்க தயார் என்று பேசியது ரூட்டையே மாற்றிவிட்டது.
தொடக்கத்தில் இதுபற்றி அலட்டிக்கொள்ளாத சிவசேனா, தற்போது கூட்டணியை மாற்றிக்கொள்ளும் முடிவுக்கு மெல்ல நகர்ந்துவருகிறது. சிவசேனாவைச் சேர்ந்த மூத்த  தலைவர் சஞ்சய் ரவுத் மற்றும் அக்கட்சியின் எம்.பி.க்கள் சிலர் நேற்று இரவு சரத்பவாரை திடீரென்று சந்தித்து பேசியிருப்பது மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரிக்க, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க தேசியவாத காங்கிரஸ் முயன்றுவருகிறது. இந்த மூன்று கட்சிகளும் ஒன்றுசேர்ந்தால் 154 உறுப்பினர்களின் பலம் கிடைக்கும். மகாராஷ்டிராவில் மெஜாரிடிக்கு 145 உறுப்பினர்களே போதுமானது. 
சிவசேனாவின் பார்வை தேசியவாத காங்கிரஸை நோக்கி திரும்பியுள்ள நிலையில், இந்த இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்குமா என்ற கேள்வியும் அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.