கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான சிவகுமார் வரி ஏய்ப்பு செய்திருந்ததாகவும், ஹவாலாவில் கோடிக் கணக்கில் பணப் பரிமாற்றம் செய்ததாகவும் வருமான வரித்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் சிவகுமாரின் மீது பணமோசடி வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த சனிக்கிழமை முதல் டெல்லியில் வைத்து சிவகுமாரிடம் அமலாக்கத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். இந்தநிலையில், நேற்று இரவு சிவகுமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து இன்று சிவகுமார் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அமலாக்கத்துறை சார்பில், ‘விசாரணைக்கு சிவகுமார் ஒத்துழைக்கவில்லை. மழுப்பலான பதில்களைத் தெரிவித்தார். அவர் முக்கியமான பதவிகளில் இருந்தபோது, அவருடைய வருமானம் அளவுக்கதிகமாக அதிகரித்துள்ளது’ என்று வாதிடப்பட்டது. 

சிவகுமார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘காவல் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். சிவகுமார் எல்லா விசாரணைக்கு ஆஜரானார்’ என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் 13-ம் தேதி வரையில் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி அளித்தது.