மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் புறநகரில் சஞ்சய்காந்தி என்ற மிகப்பெரிய வனம் உள்ளது. இந்த பகுதிக்கு அருகே குடியிருப்பு பகுதியான ஆரே உள்ளது. குடியிருப்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் உள்ளது. மெட்ரோ 3 ரயில் கட்டுடமான பணிகளுக்காக இந்த பகுதியில் உள்ள 2,500 மரங்களை வெட்ட மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்தது. இதற்கு குடியிருப்பு வாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சமூக ஆர்வலர்கள் இதனை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

 ஆனால் வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. இதனையடுத்து மெட்ரோ பணிக்காக ஆரே பகுதியில் உள்ள மரங்களை வெட்டும் பணி தொடங்கியது. இதனையடுத்து மரங்களை வெட்டுவதற்கு எதிர்த்து கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த பகுதியில் சமூக ஆர்வலர்கள் மக்கள் குவிந்தனர்.

 

போலீசாரின் தடுப்புகளை தகர்த்து மறியில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார்  தடியடி நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 29 பேரை போலீசார் கைது செய்து காவலில் வைத்தனர்.

 144 தடை உத்தரவு பிறப்பித்த பிறகு நேற்று அந்த பகுதிக்குள் நுழைய முயன்ற சிவ சேனா கட்சியை சேர்ந்த பிரியங்கா சதுவர்வேதியை போலீசார் தடுத்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

இது தொடர்பாக பிரியங்கா சதுவர்வேதி தனது டிவிட்டரில், நான் சட்டத்தை மீறாத நிலையில் என்னை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். காரில் என்னை எங்கு அழைத்து செல்கின்றனர் என்பதை கூட கூறவில்லை. இது பைத்தியக்காரதனமானது டிவிட் செய்து இருந்தார். கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவரை பா.ஜ. அரசு வலுக்கட்டாயமாக வெளியேற்றிய விவகாரம் தற்போது பெரும் பரபரப்பாகி உள்ளது.