மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 106 இடங்களிலும், அதோடு கூட்டணி வைத்த சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.  காங்கிரஸ் 44 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றிபெற்றன.

தேர்தல் முடிவுகளுக்குப் பின் வெளிவந்த சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிகையான சாம்னாவில், ‘பாஜக அரசுக்கு எதிரான மக்களின் கோபம் கடுமையாக வெளிப்பட்டிருக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். 

அதேநேரம் அமைய இருக்கும் அரசில் சிவசேனாவும்- பாஜகவும் சம பங்குதாரர்களாக இருக்க வேண்டும் என்று சொல்லித்தான் கூட்டணி அமைத்தோம். அதை இப்போது மீண்டும் நினைவுபடுத்துகிறோம் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்தல் முடிவுகளுக்குப் பின் தெரிவித்திருந்தார். 

ஆனால் பாஜக தரப்பில் இருந்து இதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. டெல்லி தலைமை ஹரியானாவில் அரசு அமைப்பதில் திவீரமாக இருக்கிறது.

இதற்கிடையில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் பாபாசாஹிப் தரோட் இன்று பேசிய போது தங்கள் கட்சி சிவசேனாவுடன் கூட்டணி அமைக்க தயாராக இருப்பதாக கூறி பெரிய குண்டைப் போட்டார்.

இப்போதைய கணக்குப்படி 288 இடங்கள் கொண்ட மகாராஷ்ரா  சட்டமன்றத்தில் ஆட்சி அமைக்க 145 பேர் ஆதரவு வேண்டும். பாஜக 106 இடங்களில்தான் வெற்றிபெற்றிருக்கிறது. 56 இடங்கள் வெற்றிபெற்றுள்ள சிவசேனாவின் உறுதியான ஆதரவு இருந்தால் மட்டுமே பாஜக கூட்டணி ஆட்சியை அமைக்க முடியும்.

இந்நிலையில் தங்களது கோரிக்கையை பாஜக நிறைவேற்றத் தவறினால் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைக்க சிவசேனா மறைமுகமாக முயற்சி செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது பாஜகவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.