தென்னகத்தின் நான்கு மாநிலங்களும் காவிரி நீரை நியாயமாக பகிர்ந்து கொள்ளும் வகையில், உச்சநீதிமன்றம் அறிவுறுத்திய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய காலக்கெடு இன்னும் ஒரேயொரு மணி நேரத்திற்குள் முடிவடைகிறது. தேசிய அளவில் இருக்கும் சூழலை வைத்துப் பார்த்தால் இந்த வாரியம் அமைக்கும் உத்தரவை மோடி வழங்கப்போவதில்லை என்பது உறுதியாக தெரிகிறது.

நிலவரம் துவக்கத்தில் இருந்தே தங்களுக்கு சாதகமாகவே நகர்கிறது என்பதில் கர்நாடகாகாரர்கள் பெரும் மகிழ்ச்சியில் இருந்தனர். கடைசி நாளான இன்று தமிழகமெங்கும் விவசாயிகள் கடும் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த நிலையில், கர்நாடகாவில் அவ்விவசாயிகள் கூலாக உட்கார்ந்து டி.வி.யில் அப்டேட் செய்திகள் கவனித்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கர்நாடக முதல்வரான சித்தராமையா, அனைத்து கட்சி முக்கியஸ்தர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார். பின் வெளியே வந்தவர், “காவிரி மேலாண்மை வாரியம் அமைந்திட வாய்ப்பே இல்லை. அப்படி கர்நாடகத்துக்கு துன்பம் தரும் ஏதாவது உத்தரவை மத்தியரசு வெளியிட்டால் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும்.” என்று மிக கெத்தாக எச்சரிக்கை விடுத்தார்.

அதேவேளையில் தமிழகத்தில் தன் அமைச்சரவை சகாக்களுடனும், அதிகாரிகளுடனும் அமர்ந்து வழக்கம் போல் ஆலோசனை கூட்டம் போட்டுவிட்டு கலைந்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழக உரிமையின் கழுத்தில் கால் வைத்து நசுக்கும் மத்திய அரசை நோக்கி ஒரு வார்த்தை கூட வீரியமாகவோ, ஆதங்கத்துடனோ பேசிடவில்லை எடப்பாடி.

கடைசி நாளான இன்று இரு முதல்வர்களின் ரியாக்‌ஷன்களையும் ஒப்பிட்டு விமர்சித்திருக்கும் அரசியல் பார்வையாளர்கள்...”இந்த தேசத்தின் மிக உயரிய அதிகார அமைப்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையே தூக்கி குப்பையில் போட்டிருக்கிறது கர்நாடக அரசு. அதற்கு கைத்தாங்கலும் செய்திருக்கிறது மத்திய அரசு.

ஆனாலும் கூட மத்திய அரசை நோக்கி ‘பின் விளைவை சந்திப்பாய்’ என எச்சரித்திருக்கிறார் சித்தராமையா. அவர் மத்திய அரசை எச்சரிப்பது என்பது மோடியை எச்சரிப்பதே. சூழல் சாதகமாக இருந்தும் கூட மிக கெத்தாக, ஆணவத்துடன் இதைச் செய்து தன் மாநில மக்களின் உணர்வுகளை தன் வாயிலாக காட்டியிருக்கிறார்.

ஆனால் தமிழக முதன் மந்திரியும், துணை முதன் மந்திரியும் அறைக்குள் ஒண்டிக் கிடந்திருக்கிறார்கள் இன்று. இந்த ஆறு வார காலமும் வெறும் ஆலோசனை மட்டுமே நடத்திக் கொண்டிருந்த எடப்பாடி இன்றும் ஆலோசனை மட்டுமே நடத்தியிருக்கிறார்.

தமிழகம் முழுக்க விவசாயிகள் வேகாத வெயிலில் உரிமைக்குரல் கொடுத்து கதறி சரிகிறார்கள், டெல்லியில் நடு ரோட்டில் கிடந்து பி.ஆர். பாண்டியன் தரப்பு உருள்கிறது.

ஆனால் ஏ.ஸி. கூத்தாடும் அறையில் அரசு செலவில் ஸ்நாக்ஸ் சாப்பிட்டபடி எடப்பாடியும், பன்னீரும் மேப்களை எடுத்து வைத்து சீன் போடுவதும், மோடிக்கு எதிராக சிறு கண் ஜாடை கூட காட்டாததும் அவலம் மட்டுமில்லை அசிங்கம். தன் சொந்த மக்களின் உரிமைக்கு போராடாத அரசாங்கத்தினால் வறண்ட காவிரியில் தரை தட்டி நிற்கிறது தமிழனின் உரிமை.” என்று கொதித்திருக்கிறார்கள்.