அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தினால் அதிமுக மீண்டும் இரண்டு பிரிவுகளாக பிரிவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவில் சசிகலா ஆதிக்கத்திற்கு எதிராக தர்மயுத்தம் நடத்தி அதிமுகவை சசிகலா குடும்பத்திடம் இருந்து மீட்டவர் ஓபிஎஸ். ஆனால் இதற்காக தனது முதலமைச்சர் பதவியை ஓபிஎஸ் தியாகம் செய்ய நேரிட்டது. ஆனாலும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியுடன் துணை முதலமைச்சர் பதவியையும் கவுரவம் பார்க்காமல் பெற்று கடந்த 3 வருடங்களாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் முதலமைச்சர் பதவியை மையமாக வைத்து அதிமுகவில் மீண்டும் பூகம்பம் வெடித்துள்ளது.

முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிறுத்த எடப்பாடி பழனிசாமி அனைத்து முஸ்தீபுகளையும் செய்து முடித்துவிட்டார். ஆனால் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவிக்க ஓபிஎஸ் மறுத்து வருகிறார். இது குறித்து வெளிப்படையாக கட்சிக்குள் யாரும் பேசாத நிலையில், அடுத்த முதலமைச்சரும் இபிஎஸ் தான் என்று ராஜேந்திர பாலாஜி அறிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஆங்காங்கே, எடப்பாடி பழனிசாமியை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக களம் இறக்க கோரி போஸ்டர்கள் அடிக்கப்பட்டன.

இந்த நிலையில் சுதந்திர தின நிகழ்ச்சி நிரல் துணை முதலமைச்சர் ஓபிஎஸ்சை டென்சன் ஆக்கியது. ஓபிஎஸ் வசம் இருக்கும் கருவூலத்துறைக்கு சிறந்த நல் ஆளுமைக்கான விருதை தமிழக அரசு அறிவித்தது. எனவே அந்த துறைக்கு பொறுப்பான ஓபிஎஸ் சுதந்திர தினத்தன்று இபிஎஸ் கைகளால் அந்த நல் ஆளுமை விருதை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனை விரும்பாத ஓபிஎஸ், தன்னால் அந்த விருதை பெற முடியாது என்று கூறி வந்துள்ளார். மேலும் இது தொடர்பான சம்பவங்களை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை தலைமைச் செயலகத்தில் இருந்து வீட்டிற்கு புறப்பட்ட போது சேம்பருக்கு வெளியே அனைவருக்கும் கேட்கும் படி அமைச்சர் ஒருவரை கடுமையாக பேசியபடி ஓபிஎஸ் சென்றதாக சொல்கிறார்கள்.

அதாவது அமைச்சர்கள் தன் இஷ்டத்திற்கு பேசினால் கட்சி மேலிடம் என்று ஒன்று எதற்கு உள்ளது. அந்த அமைச்சரை எல்லாம் ட்விட்டரில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து கருத்து தெரிவிக்கச் சொன்னது யார்? கட்சிக்கு அவர் ஒருங்கிணைப்பாளரா, நான் ஒருங்கிணைப்பாளரா? அந்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல், தூண்டு விடுகிறார்களா? பதிலுக்கு நான் அரசியல் செய்தால் என்ன ஆகும் என்று அனைவருக்கும் கேட்கும்படி பேசியபடியே தலைமைச் செயலகத்தில் இருந்து ஓபிஎஸ் சென்றுள்ளார். மறுநாள் சுதந்திர தின விழா அன்று முதலமைச்சர் பேசும் போது, மக்களின் ஆதரவும், அன்பும் தனக்கு இருக்கிறது என்று கூறியுள்ளார்.

இந்த வார்த்தை ஓபிஎஸ்சை டென்சன் ஆக்கியுள்ளது என்கிறார்கள். மக்களின் ஆதரவும், அன்பும் அவருக்கு இருக்கிறது என்றால் அப்போது நடப்பது அதிமுக அரசு அல்ல? எடப்பாடி பழனிசாமி அரசா? எடப்பாடிக்கு என்ன மனதில் ஜெயலலிதா என நினைப்பா என்று ஓபிஎஸ்சை அந்த வார்த்தைகள் கொந்தளிக்க வைத்துள்ளதாக சொல்கிறார்கள். தொடர்ந்து கருவூலத்துறைக்கான நல் ஆளுமை விருதை கொடுக்க ஓபிஎஸ்சை மேடைக்கு அழைத்துள்ளார்கள். தன்னை அழைக்க வேண்டாம் என்று கூறியும் தன்னை அழைத்து முதலமைச்சர் கைகளால் விருது கொடுத்ததை ஓபிஎஸ்சால் ஜீரனித்துக் கொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்கள்.

மேலும் நிகழ்ச்சி முடியும் சமயத்தில் அங்கு எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் சில கருத்துகளை கூறியதாகவும் இது உடனடியாக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் சொல்கிறார்கள். இதன் பிறகு முதலமைச்சரின் அறிவுறுத்தலை தொடர்ந்து அமைச்சர்கள் அனைவரும் ஓபிஎஸ் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர். முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி தன்னை முன்னிறுத்துவரை ஒரு சதவீதம் கூட ஏற்க முடியாது என்பது தான் ஓபிஎஸ்சின் முடிவு என்கிறார்கள். அப்படி இருக்கையில் எடப்பாடி பழனிசாமி தன்னை அதிமுகவின் அதிகாரம் பெற்ற தலைவராக நினைத்துக் கொண்டு தனக்கு விருது கொடுப்பது, மக்களின் ஆதரவு எனக்குத் தான் இருக்கிறது என்று பேசுவதை எல்லாம் ஏற்காமல் தனது அதிருப்தியை வெளிப்படுத்த அதாவது தர்மயுத்த பாணி அரசியலுக்கு ஓபிஎஸ் தயாரானதாக சொல்கிறார்கள்.

இதனால் தான் ஓபிஎஸ் வீட்டிற்கு அமைச்சர்கள் சென்று அவரை சமாதானம் செய்ததாக சொல்கிறார்கள். ஓபிஎஸ் தர்மயுத்தம் என்று ஆரம்பித்தால் அதனை ஆதரித்து அதிமுகவை இரண்டாக உடைக்க டெல்லி மேலிடம் தயாராக உள்ளதாகவும் இதனை உணர்ந்து தான் இந்த விவகாரத்தில் தற்போதைக்கு எடப்பாடி தரப்பு வெள்ளைக் கொடி காட்டியதாகவும் சொல்கிறார்கள்.