பின்னர் அந்த வீடியோவிற்கு தலைப்பாக போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். நல்ல பழக்கங்களை கைவிட இயலாது. நல்லதை செய்வோம் நல்லதே சொல்வோம் என தலைப்பிட்டு இருந்தார். 

தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிள் ஓட்டவும் செல்பி எடுக்கும் தான் லாயக்கு என விமர்சித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு பதில் அளிக்கும் வகையில் டிஜிபி சைலேந்திரபாபு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும் ஆனால் நல்ல பழக்கங்களை கைவிட முயலாது. நல்லதை செய்வோம், நல்லதே சொல்வோம் என்று அவர் பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. 

பத்தாண்டுகள் கழித்து திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளது. அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. மழை வெள்ளத்தின் போது முதலமைச்சர் ஸ்டாலின் களத்தில் இறங்கி பணியாற்றியதை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சியான அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகள் அரசை மிகக்கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதில் பாஜக ஒருபடி மேலே போய் முதல்வர் ஸ்டாலினையும் அவரது குடும்பத்தினரையும் மற்றும் தமிழக காவல்துறை டிஜிபி என பலரையும் விமர்சித்து வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்து திமுக அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதேநேரத்தில் பாஜகவின் ஆதரவாளர்களென சமூக வலைத்தளத்தில் திமுகவை வசித்து வருபவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள கைது நடவடிக்கைகளை அண்ணாமலை மிகக் கடுமையாக கண்டித்து வருகிறார். இதே நிலை தொடர்ந்தால் பாஜக வேடிக்கை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது என்றும் அது அரசுக்கு இறுதி எச்சரிக்கை என்றும் அவர் கூறியுள்ளார். 17 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது இத்துடன் தனது மிரட்டல் நடவடிக்கைகளை திமுக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அண்ணாமலை எச்சரித்துள்ளார். அதேபோல் தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு குறித்தும் அண்ணாமலை மிக கடுமையாக விமர்சனங்களை முன்வைத்தார். அதாவது தமிழக காவல் துறை திமுக மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில்தான் இயங்கி வருகிறது. தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கட்டுப்பாட்டில் எதுவுமில்லை. சைக்கிளிங் போவதற்கும், செல்பி எடுப்பதற்கும்தான் டிஜிபி பதவி உள்ளது.

வெளிப்படையாகவே சொல்கிறேன் காவல்துறை டிஜிபியின் கட்டுப்பாட்டுக்குள் இல்லவே இல்லை என்றும், திமுக மாவட்ட செயலாளர்களின் கட்டுப்பாட்டில்தான் டிஜிபியும் காவல்துறையும் உள்ளது என்றார். அண்ணாமலையின் இந்த விமர்சனம் திமுக ஆதரவாளர்கள் மத்தியில் மட்டுமின்றி பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக டிஜிபி குறித்து கருத்து கூறுவதற்கு அண்ணாமலைக்கு தகுதி இல்லை என விமர்சித்திருந்தார். ஆனால் இந்த விவகாரத்தில் கருத்து எதுவும் கூறாமல் டிஜிபி மௌனமாக இருந்து வந்த நிலையில், நேற்று காலையும் பேஸ்புக்கில் நேரலையில் வந்த டிஜிபி சைலேந்திரபாபு, இரண்டு மணி நேரத்தில் 58 கிலோ மீட்டர் சைக்கிளில் கடந்திருக்கிறோம். 

இதில் மக்களுக்கு சொல்வதற்கு ஒரு செய்தி இருக்கிறது. சைக்கிள் ஓட்டுகிறவர்கள், பைக் ஓட்டுகிற மக்கள் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும் என்று இதன்மூலம் வலியுறுத்துகிறேன். சைக்கிள் ஓட்டும் நாங்களே ஹெல்மெட் போட்டு ஓட்டுகிறோம், வேகமாக செல்லும்போது ஹெல்மெட் நம்மை பாதுகாக்கும் என்று கூறினார். ஹெல்மட் நமது உயிரை காக்கும் இதை காவல்துறை சொல்ல வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்காதீர்கள். நீங்களாகவே ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள். அது தான் சுய ஒழுக்கம் என்பதை உணர்ந்து இன்று முதல் அதை கடைபிடிக்க வேண்டும். குழந்தைகள் மாணவர்கள் உங்கள் அப்பாக்கள் ஹெல்மெட் அணியவில்லை என்றால் ஹெல்மெட் அணிய வைத்து அவர்களை கூட்டிச் செல்லுங்கள். ஹெல்மெட் போட்டால் தான் வண்டியில் ஏறுவேன் என்று அடம்பிடியுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார். 

பின்னர் அந்த வீடியோவிற்கு தலைப்பாக போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும். நல்ல பழக்கங்களை கைவிட இயலாது. நல்லதை செய்வோம் நல்லதே சொல்வோம் என தலைப்பிட்டு இருந்தார். இந்த தலைப்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு கொடுக்கப்பட்ட பதிலடி எனவும் சமூகவலைதளத்தில் திமுக ஆதரவாளர்களால் அது பரப்பப்பட்டது. சிறிது நேரத்தில் தான் இட்ட தலைப்பை டிஜிபி சைலேந்திரபாபு மாற்றிவிட்டார். சைலேந்திரபாபு அவர்கள் வெளியிட்ட தலைப்பும், பின்னர் அதை அவர் நீக்கியதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.