Siege of Labor Commission

சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர்கள் நல ஆணைய அலுவலகத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளன.

போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தை 2.57 மடங்கு உயர்த்த வேண்டும், நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வூதியம் மற்றும்
பணப்பலன்களை முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று 7-வது நாளாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள்
வேலைநிறுத்தில் ஈடுபட்டு வருகின்றன.

நீதிமன்ற எச்சரிக்கைக்குக்குப் பிறகும், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, போக்குவரத்து துறை அமைச்சர் அழைப்பு விடுத்தும், தொழிலாளர்கள் இன்று 7-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றன. நாகை, தஞ்சை, புதுகை மாவட்டத்தில் நேற்று 20 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

சென்னை, பல்லவன் பணிமனை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அப்போது பேசிய சிஐடியூ சௌந்தரராஜன், போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படும் என்றும், அமைச்சர், நீதிபதியின் கார் டிரைவர் வாங்கும் சம்பளத்தை பேருந்து ஓட்டுநருக்கும் தர வேண்டும் என்று கூறினார். சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள
தொழிலாளர் நல ஆணைய அலுவலகம் முற்றுகையிடப்படும் என்று நேற்று கூறியிருந்தார். சென்னை மட்டுமின்றி அனைத்து மாவட்டங்களிலும் தொழிலாளர் நல அலுவலகம் முற்றுகையிடப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று சென்னை, தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்தை போக்குவரத்து தொழிலாளர்கள் 500-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தன்போது ஊதிய உயர்வு, நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தி போரட்டக்காரர்கள் கோஷமிட்டு வருகின்றனர்.

இதேபோல், தமிழகம் முழுவதும உள்ள தொழிலாளர் நல ஆணைய அலுவலகத்தை, போக்குவரத்து தொழிலாளர்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளன. கோவையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அண்ணா தொழிற்சங்கத்தினரும் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.