Asianet News TamilAsianet News Tamil

சித்த மருத்துவர் வீரபாபுவின் ‘சிறப்பான சேவை...’அது போன வருஷம்... இது இந்த வருஷம்..!

இது போன்ற மலினமான வார்த்தைகளை ஒரு நோயாளியின் குடும்பத்தாரிடம் ஒரு மருத்துவர் பயன்படுத்துகிறார் என்றால் இது என்ன மாதிரியான மனநிலை என்று விளங்கவில்லை.  

Siddha doctor Veerababu's excellent service
Author
Tamil Nadu, First Published May 18, 2021, 5:29 PM IST

கடந்த ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த சித்த மருத்துவர் வீரபாபுவுவின் சேவையை கொண்டாடியவர்கள், இந்த ஆண்டு அதற்கு நேர்மறையாய் இவரா இப்படி என வாய்பிளக்கிறார்கள். காரணம் இந்த ஆண்டு சிறப்பாக கவனித்து வருகிறார் அவரது பாக்கெட்டை என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள். கடந்த ஆண்டு கொரோனா அதிகரித்தபோது தமிழக சுகாதாரத் துறை மூலமாக சித்த மருத்துவர் வீரபாபு அழைக்கப்பட்டு அவர் மூலமாக 6000 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு மரணமின்றி குணப்படுத்தியதாக போற்றப்பட்டார். பின்னர் அந்த சேவையில் இருந்து விலகிக் கொண்டார்.  Siddha doctor Veerababu's excellent service

சென்னையில் சில இடங்களில் உழைப்பாளி உணவகத்தை ஆரம்பித்து ரூ.10க்கு உணவு வழங்கி வந்தார். ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்த உடன் உழைப்பாளி உணவகங்களை இழுத்து மூடி விட்டார். அடுத்து கொரோனாவுக்கு இலவச சிகிச்சை அளிப்பதில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டார். பணம் கொடுப்போருக்கு மட்டுமே அவர் சிகிச்சை அளித்து வருகிறார். ஒரு மருத்துவர் பணம் பெறக்கூடாதா? எனக் கேள்வி கேட்கலாம். ஆனால் அவரது இலவச சேவை, மனிதநேயர் என்கிற என்பதையெல்லாம் வியாபார யுக்தியாக மூலதனமாக்கி அந்த பெயரை வைத்து இப்போது மக்கள் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு பணம் பெறுவதாக அதிர்ச்சியூட்டுகின்றனர். ​

இதுகுறித்து ஊடகத்துறையில் உள்ள ஒருவர் தனக்கு வீரபாபுவால் நேர்ந்த அறத்தை பதிவிட்டுள்ளார். அதில், ‘’கனத்த இதயத்துடன் உணர்வு வயப்பட்ட நிலையில் எழுதும் வார்த்தைகள் இவை. ஆனால், எவ்வித புரட்டும் இன்றி விழும் வார்த்தைகள். கொரோனா முதல் அலையின் போதே அவரை கூர்ந்து கவனித்தேன். அவரிடம் சிகிச்சை பெறுபவர்கள் குணமடைகிறார்கள் என்று அறிந்தபோது இன்னும் சற்று கவனிக்கலானேன்.  சித்த மருத்துவர்கள் என்று சொல்லி போலியாக திரிபவர்கள் மத்தியில், முதலில் உண்மையிலேயே  இவர் சித்த மருத்துவர் தானா என்பதை ஆய்ந்தறிந்தேன். பின்னர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட  சித்த மருத்துவர்தான் என்பதை  அறிந்து உறுதி செய்தேன். பிறகு, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின்போது  ஜவஹர் கல்லூரியில் அரசே அவரை நியமித்து மருத்துவம் பார்க்க வைத்தது. Siddha doctor Veerababu's excellent service

அப்போதுதான் அவரை கடும் மோசமான சூழலுக்கு மத்தியில் நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிட்டியது. பண்பாக, பொறுமையாக பேசக்கூடிய நபராக இருந்தார். நமக்கும் சித்த மருத்துவம் மீது ஓரளவு நம்பிக்கையும் மதிப்பும் இருந்ததால் "காரில்" வந்து இறங்கினாலும் பந்தா இல்லாத நபராக இருக்கிறார் என்று  நம்பிக்கை துளிர்த்தது.  விடைபெற்ற போது இரண்டு ஒளிப்பதிவாளர்கள் மற்றும் எனக்கும் சித்த மருத்துவ பொடி கொடுத்தார். இதனை மூத்த அமைச்சர்கள் வரை வாங்கி செல்கிறார்கள் என்பதையும் சொன்னார். சித்த மருத்துவம் மீதான மோசமான பிம்பம் கட்டமைக்கப்பட்ட அந்த நேரத்தில் உண்மையில் ஒரு ஆபத்பாந்தவனாக நான் அவரை கண்டேன் என்பதை ஒப்புக்கொள்கிறேன். நாட்கள் ஓடின. 

என் நெருங்கிய உறவினருக்கு உடல் நலிவுற்றபோது அவர் "சொன்ன இடத்தில் சென்று ஸ்கேன்" எடுத்துவந்து பிறகு சிகிச்சைக்கான சித்த மருந்துகளை பெற்று அவரை தேற்றினேன். முழுமையாக மீண்டு வந்தார்.  அவர் மீது வைத்த  மதிப்பு அப்படியேதான் இருந்தது. பிறகு அவர் ரஜினிக்காக காத்திருக்கிறார் போன்ற  தகவல்கள் கிட்டியது. ஆனால், கண்டுகொள்ளவில்லை. பிறகு உழைப்பாளி மருத்துவமனையின் பேனர் ஓரத்தில் ரஜினிகாந்த் படம் இருந்தபோது அவர் மீதான அபிமானியாக இருப்பார் என்று உறுதி செய்தேன். அரசுடன் ஏற்பட்ட "நிதிச்சிக்கல்" காரணமாக ஜவஹர் கல்லூரியில் இருந்து விலகிய தகவல்களை அறிந்தேன். அவர் மூலம் மேலோட்டமாக தெரிந்து கொண்டேன். ஆழமாக கேட்டுக்கொள்ளவில்லை.  நாட்கள் செல்லச் செல்ல  ஒரு சிலர் அவர் மீது சில புகார்களை என்னிடம் சொன்னார்கள். அப்போதும் ஒருவரின் வளர்ச்சியின் போது இதுபோன்ற விஷயங்கள் வருவது இயல்பே என்று எண்ணி கடந்து போனேன். 

இந்த இரண்டாம் அலையின்போது அவரை நேரில் சென்று பேட்டி கண்டேன். அந்த காணொளி  கிட்டதட்ட 7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை கடந்தும் ஓடிக்கொண்டிருக்கிறது.  ஆனால், இப்போது நிகழ்ந்த நிகழ்வு எனக்கு ஆழமான மனவடுவை உருவாக்கியுள்ளது.  தகப்பன் இல்லாத பிள்ளைக்கு உடல்நலம் குன்றி கொரோனாவால் படுக்கையில்லாமல் அலைந்து கொண்டிருந்த ஒருவர் என் அலுவலக தோழரின் நண்பர். அவருக்கு ஐயா வீரபாபுவை அணுக சொல்லி சொன்னேன். நேரில் சென்று என் பெயரை சொல்லி சிகிச்சைக்காக வந்திருப்பதாக விவரித்து சொன்னதும் "இன்றே சேருங்கள்" என்றும் கட்டணமாக "1 லட்சத்திற்கு நிகராக" வைத்துக்கொள்ளும்படியும் சொல்லியுள்ளார்.  சற்று வியப்பாக இருந்தாலும் சரி என்று அதற்கான வேலைகளும் எங்கள் பக்கம் நடந்தது. Siddha doctor Veerababu's excellent service

படுக்கையில்  சேர்த்து 24 மணி நேரத்திற்குள்ளாக "மேற்கொண்டு 1.5லட்சம் தொகை கட்டினால் தான்" சிகிச்சை என்றும் "இல்லையென்றால் கொண்டு செல்லலாம்" என்று பதில் கொடுத்துள்ளார்கள். கூடுதலாக, "மீடியா காரர் மூலமாக ஓசி சிகிச்சை செய்யலாம் என்று நினைப்பா" என்று சொன்னதாகவும் அந்த நண்பர் சொல்லி வருத்தப்பட்டார்.   இதை கேட்ட மறுகணம் எனக்கு வியர்த்து போனது.  ஒரு சாதாரண இளைஞனாக நம்பிக்கை தரும் வகையில் முக்கிய தலைவர்களை (தமிழருவி மணியன் , பொன்ராஜ் )  நோயிலிருந்து குணம் செய்த நபர், பண்பானவர் மற்றும் நம்பிக்கைக்கு உரியவர் என்ற வகையில் நான் கைகாட்டிய நபர் இப்படிப்பட்ட வன்மம் கொண்ட பதிலை தந்துள்ளார் என்று எண்ணும்போது  என்னிடம் பதில் சொல்ல வார்த்தைகள் இல்லை. 

இப்போது வேறு மருத்துவமனை நோக்கி நகர்ந்துள்ளார்கள் அந்த நண்பரும் மகனும். வாங்கிய 50,000 இல் மீதம் 45,000 கொடுக்கப்பட்டுள்ளது.  இது போன்ற மலினமான வார்த்தைகளை ஒரு நோயாளியின் குடும்பத்தாரிடம் ஒரு மருத்துவர் பயன்படுத்துகிறார் என்றால் இது என்ன மாதிரியான மனநிலை என்று விளங்கவில்லை.  யாரையும் நம்ப முடியாத ஒரு சூழல் நிலவுவதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.  அரசு இதுபோன்ற விடயங்கள் நடக்காதவாறு  கண்காணிக்கும் என்று நான் நம்புகிறேன். குற்ற உணர்வுக்கு ஆட்பட்டிருக்கிறேன். உங்களை அணுக முடியாததால் இங்கு கேட்கிறேன். ஐயா வீரபாபு அவர்களே இது அறமா..?’’ என ஊடகவியலாளரான அருள் மொழிவர்மன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios