கர்நாடாகவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் கடந்த சில நாட்களுக்கு ராஜீனாமா கடிதம் அளித்தனர். அதனையடுத்து, கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ராஜீனாமா கடிதம் அளித்த எம்.எல்.ஏக்கள் மும்பையிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ளனர்.

அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் காங்கிரஸ் மூத்த தலைவரும் கர்நாடகா மாநில அமைச்சருமான சிவகுமார் ஈடுபட்டார். இருப்பினும், அவரது முடிவு தோல்வியையே சந்தித்துள்ளது. இன்று  கூடவுள்ள சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்க வேண்டிய கட்டாயத்தில் முதலமைச்சர்  குமாராசாமி உள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவகுமார், ‘கூட்டணி அரசைக் காப்பதற்காக, முதலமைச்சர்  பதவியை காங்கிரஸுக்கு விட்டுத்தருவதற்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் தயாராக உள்ளது என்றும் சித்தராமையா, பரமேஸ்வரா, அல்லது நான், எங்களில் யாராவது முதல்வராக வேண்டும் என்று மதச்சார்பற்ற ஜனதா தளம் வலியுறுத்தியது’ என்று தெரிவித்தார்.

சிவகுமாரின் இந்த கருத்து கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், சிவகுமாரின் கருத்தை கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டு ராவ் மறுத்துள்ளார். ’தற்போது, நாங்கள் பெரும்பான்மையை நிருபிக்கும் எண்ணத்தில் மட்டுமே உள்ளோம். வேறு எந்த திட்டமும் எங்களிடம் இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.