சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்ட விவகாரத்தில் விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கர்நாடக மாநில முதலமைச்சர் சித்த ராமையா தெரிவித்துள்ளார்.  

பெங்களூருவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார்.

கர்நாடக மாநில சிறைத்துறை டிஐஜி யாக இருந்த ரூபா கூறியதைப் போல சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் வசதிகள் செய்து தருவதற்காக அதிகாரிகள் யாரும் லஞ்சம் பெறவில்லை என சித்தராமையா கூறினார்.

சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் விசாரணையை நடத்தி வருவதாகவும், இந்த  விசாரணை அறிக்கை கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சித்தராமையா கூறினார்.

கர்நாடகாவிற்கு தனிக்கொடி கேட்பதில் எந்த சட்ட மீறலும் இல்லை என்றும், அரசியல் அமைப்பு சாசனத்தின்படி மாநிலங்கள் தனிக்கொடி வைத்துக் கொள்வதில் தவறில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

கர்நாடக அரசின் தனிக்கொடி கோரிக்கைக்கு காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தி ஆதரவாகவே உள்ளார் என்றும் சித்தராமையா தெரிவித்தார்.