சாதி வாரியாக இட ஒதுக்கீடு வழங்குவதில் மாநில அரசிடம் உள்ள அதிகாரத்தை பறிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக, கர்நாடக முதல்–-அமைச்சர் சித்தராமையா குற்றம்சாட்டினார்.

கர்நாடக முன்னாள் முதல்–-அமைச்சர் தேவராஜ் அர்சின் பிறந்தநாள் விழாவையொட்டி, பெங்களூரு விதானசவுதாவில் வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு முதல்–-அமைச்சர் சித்தராமையா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் நடந்த விழாவில் நாடாளுமன்ற காங்கிரஸ் குழு தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு, தேவராஜ் அர்ஸ் விருதை வழங்கி சித்தராமையா கவுரவித்தார். விழாவில் அவர் பேசியதாவது:-–

நாட்டில் சாதிகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடு இருக்கத்தான் செய்யும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஒரே கட்சி பா.ஜனதாதான். எந்த சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், எந்த சாதிக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசிடம் உள்ளது. ஆனால் மாநில அரசிடம் உள்ள இந்த அதிகாரத்தை பறிக்க மத்திய பா.ஜனதா அரசு முயற்சி செய்கிறது.

தலித் ஓட்டுகளை பெறுவதற்காக பா.ஜனதாவினர், அவர்களது வீடுகளுக்கு சென்று சாப்பிடுகிறார்கள். ஆனால் அவர்களது வீடுகளில் சமைக்கும் உணவை சாப்பிடாமல், ஓட்டலில் இருந்து வாங்கிவந்த உணவை எடியூரப்பா சாப்பிட்டார். இதனை மக்கள் நன்கு அறிவார்கள். பதவிக்காக பா.ஜனதாவினர் என்ன வேண்டுமானலும் செய்வார்கள்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.