தன்னைக் கண்டு பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பயப்படுவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைத்ததற்கு பிறகு நடந்த சட்டமன்ற தேர்தல்களில், பஞ்சாபை தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜக ஆட்சியமைத்துவிட்டது. அடுத்ததாக கர்நாடகாவையும் கைப்பற்ற பாஜக தீவிர முயற்சிகளை எடுத்துவருகிறது. 

கர்நாடகாவில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸும் பாஜகவும் மிக தீவிரமாக உள்ளன. அதற்காக பாஜக சார்பில் தேசிய தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தியும் தீவிர பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மைசூரில் செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில முதல்வர் சித்தராமையா, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, அவருக்கு பிடித்தமான இடங்களுக்கு செல்லலாம். அது அவரது விருப்பம். அதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால், அவர் நான் செல்லும் இடங்களுக்கு எல்லாம் வந்துகொண்டிருக்கிறார். என்னை கண்டு அமித் ஷாவுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால்தான் நான்  செல்லும் இடங்களுக்கெல்லாம் அவர் பின்தொடர்ந்து வருகிறார்.  

நான் இந்து அல்ல என்று அமித் ஷார் கூறியிருக்கிறார். என்னை கண்டு பயப்படுவதால்தான் என்னைப்பற்றி இல்லாததையும் பொல்லாததையும் கூறிவருகிறார் என சித்தராமையா தெரிவித்தார்.