siddaramaia gave a counter to yogi about Hindu
உங்களைவிட நான் மிகச் சிறந்த ஹிந்து என்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் பாஜகவில் இருப்பவர்கள் மட்டும்தான் ஹிந்துக்களா? என்றும் ஹிந்துக்கள் அனைவருக்கு ஏகபோக உரிமையாளர் பாஜகவா என கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல், அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற உள்ளது. குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில், பாஜக வெற்றி பெற்றதைப் போன்று கர்நாடகாவிலும் வெற்றி பெற வேண்டும் என அக்கட்சியினர் வியூகம் வகுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், தற்போது கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய யோகி, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

இந்தியாவில் மாற்றம் மற்றும் முன்னேற்றத்தை ஏற்படுத்த பாஜகவால் மட்டுமே முடியும் என்று கூறினார். விரைவில் தேர்தலை சந்திக்க உள்ள வாக்காள பெருமக்களே, இத்தேர்தலில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்போவது திப்பு சுல்தானையா அல்லது கடவுள் ஹனுமாரையா என்று கேள்வி எழுப்பினார்.
ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. வரும் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என குறிப்பிட்டார்.

யோகி ஆதித்யநாத்தின் பிரச்சாரத்திற்கு பதில்டி கொடுத்துள்ள , கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யா உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விட, நான் சிறந்த ஹிந்து என கூறினார்.
தனது பெயரிலேயே, சித்த மற்றும் ராமா என்று உள்ளது என குறிப்பிட்ட அவர், . காங்கிரஸ் கட்சியினர் எல்லா மதங்களையும் மதிப்பவர்கள். எல்லோரையும் சமமாக பாவிப்பவர்கள். அதுவே எங்கள் பண்பாடு, அதுதான் உண்மையான ஹிந்துத்துவா கொள்கை என்று அதிரடியாக தெரிவித்தார்

ஹிந்து, ஹிந்து என்று அடிக்கடி கூறிவரும் பாஜகவினர் தான், ஹிந்துக்களின் ஏகபோக உரிமையாளரா? அக்கட்சியில் இருப்பவர்கள் தான் ஹிந்துக்கள் என்றால், மற்றவர்கள் எல்லாம் யார்? என கேள்வி எழுப்பினார்.

பாஜகவினர் கர்நாடக தேர்தலில் வெற்றி பெற மதகலவரத்தை தூண்ட முடிவு செய்துள்ளனர் என்றும் ஆனால், அவர்களின் கனவு கர்நாடகாவில் பலிக்காது. என்றும் சித்தராமையா தெரிவித்தார்.
