அரசு இடத்தில் உள்ள கோயில்கள் இடிக்கப்படும் என்றால், கோயில் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கலாமா என பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை தலைமைச் செயலகம் மற்றும் ரிசர்வ் வங்கிக்கு எதிரே, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலத்தில், கோட்டை பாளையத்தமன் கோயில் உள்ளது. பொதுப்பணி துறைக்கு சொந்தமான இந்த நிலத்தை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை காலி செய்து இடத்தை ஒப்படைக்க வேண்டும் என்ன மாவட்ட வருவாய் அலுவலரும், புரசைவாக்கம் வட்டாச்சியரும் கோயில் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பினர். இதனை எதிர்த்து கோயில் பூசாரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், பூசாரி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தனர். மேலும், பக்தர்கள் ஆக்கிரமிப்பு நிலத்தில் கோயிலைக் கட்டமாட்டார்கள். இடிக்கப்படும் எனத் தெரிந்தே கோயில் கட்டமாட்டார்கள். சுயநலனுக்காக ஆக்கிரமிப்பு கோயில்கள் கட்டப்படுகின்றன. தூணிலும், துரும்பிலும் இருக்கும் கடவுள், ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தனக்கு இடம் வேண்டும் என கேட்பதில்லை எனக் கூறி, அந்த கோயிலை இடிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இந்த நிலையில், பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, அரசு இடத்தில் உள்ள கோயில்கள் இடிக்கப்படும் என்றால் கோயில் இடங்களில் உள்ள அரசு அலுவலகங்கள் இருக்கலாமா? என கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், அரசு இடத்தில் உள்ள கோயில்கள் இடிக்கப்படும் என்றால், கோயில் இடங்களில் உள்ள அரசு
அலுவலகங்கள் இருக்கலாமா? அரசு இடத்தில், சாலை மத்தியில் உள்ள அனைத்து சிலைகளும் உடனே அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று பதிவிடுள்ளார்.