பள்ளி மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க, ஜனவரி 16-ந் தேதி டெல்லியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்வை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் நேரலையில் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் 16-ம் தேதி மாணவர்கள் பள்ளிகளில் ஆஜராக வேண்டும் தமிழக பள்ளிக்கல்வித் துறை செயலாளர் நேற்று ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

பொங்கல் பண்டிகை விடுமுறை நாளில், பிரதமரின் பேச்சைக் கேட்பதற்காக மாணவர்களை பள்ளிக்கு வருமாறு கட்டாயப்படுத்துவதா? என பல தரப்பிசம் எதிர்ப்புகள் கிளம்பின. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இந்த உத்தரவை வாபஸ் பெறாவிட்டால் 16-ந் தேதி திமுக சார்பில், பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையனோ, மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே பிரதமர் மோடியின் உரையாடலை காணலாம் என்று இன்று விளக்கமளித்தார். இதையடுத்து பள்ளிக்கல்வித் துறை சார்பிலும், நேற்று உத்தரவு பிறப்பித்தது குறித்து விளக்கமளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஜனவரி16-ல் பிரதமர் உரையை எங்கிருந்து வேண்டுமானாலும் மாணவர்கள் பார்க்கலாம்.

வீடுகளில் பார்க்க முடியாத மாணவர்கள் விருப்பமிருந்தால் பள்ளிகளில் காணவே பள்ளிகளில் ஏற்பாடு செய்ய சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அனைத்து மாணவர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்படவில்லை. தேர்வு பயம் குறித்து டெல்லியில் நடைபெற உள்ள மாணவர்களுடனான பிரதமரின் உரையாடல் தூர்தர்ஷன், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் ஃபேஸ்புக், டுவிட்டர் கணக்குகளில் நேரலையாகயும் ஒளிபரப்பப்பட உள்ளதால் மாணவர்கள் எங்கிருந்தும் இந்த நிகழ்வை காணலாம் என்று விளக்கமளித்து, முந்தைய உத்தரவில் இருந்து பள்ளிக்கல்வித் துறை பல்டியடித்துள்ளது.