ஒவ்வொரு பூத்திலும் நமது ஏஜென்ட்கள் நமக்கான வாக்குகள் சிதறாமல் நமக்கு கிடைக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். இதேபோல் வாக்கு எண்ணும் போதும் சரியாக பூத் ஏஜெண்டுகளை அமர்த்தி நாம் விழிப்போடு இருக்க வேண்டும். துறைமுகம் என்பது பாஜகவுக்கு ஓட்டுவங்கி இருக்கிற ஒரு பகுதி, அதனால் காலையில் 7 மணிக்கே அனைவரும் வந்து வாக்களித்து விடுங்கள். 

நாளை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பாஜக தொண்டர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அமைச்சர் சேகர்பாபு இனிமேல் தான் தன் வேலையை காட்டுவார் என்றும், தொண்டர்கள் கண்ணும் கருத்துமாக இருந்து பாஜகவுக்கான வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பெற வேண்டுமென்றும் முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் வலியுறுத்தியுள்ளார். எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்கள் தொண்டர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்றும் கராத்தே கூறியுள்ளார். 

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் 138 நகராட்சிகள் 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் 12,838 வார்டுகள் உள்ளன இந்த பதவிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நாளை தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதில் 2.50 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். மொத்தத்தில் இது ஒரு மினி சட்டமன்றத் தேர்தலாகவே கருதப்படுகிறது. இந்த தேர்தலிலும் வழக்கம் போல அதிமுக - திமுகவுக்குமே நேரடி போட்டி நிலவுகிறது. பாஜக, பாமக, நாம் தமிழர் கட்சி, அமமுக, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் தனித்து தேர்தலை சந்திக்கின்றன, இதனால் பன்முனை போட்டி நிலவுகிறது.

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பரிசுப்பொருட்கள் விநியோகிப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 90 க்கும் அதிகமான பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்தல் நடக்கும் பகுதிகள் மற்றும் அதைச் சுற்றி 5 கிலோ மீட்டர் வரை உள்ள பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. இந்த நிலையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க மற்றும் கண்காணிக்க தேர்தல் பார்வையாளர்கள் பல பகுதிகளில் கண்காணித்து வருகின்றனர். நேற்று இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பாஜகவினர் ஈடுபட்டனர். அப்போது மேடையில் பேசிய முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன், அமைச்சர் சேகர் பாபுவை குறிப்பிட்டு விமர்சித்து பேசியுள்ளார். திமுகவினர் எதையும் செய்ய துணிவர், சேகர்பாபு, மா. சுப்ரமணியன் போன்றவர்கள் களத்தில் இறங்கக்கூடியவர்கள். அதனால் பாஜக தொண்டர்கள் அலர்ட்டாக இருக்க வேண்டும் என்றார்.

அவர் மேலும் பேசியதாவது:- தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று பாஜக சார்பில் அதிகாரிகளிடம் வலுயுறுத்தியுள்ளோம், மாலை 5 மணிக்கு மேல் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது, இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி புதிய கொரோனா நோயாளிகளை உருவாக்குவார்கள், சென்னையை பொருத்தவரையில் கவனமாக இருக்கவேண்டும், மா.சுப்பிரமணியனுடைய வேலை என்னவென்றால், மத்திய அரசு கொடுத்த தடுப்பூசியை மாநில அரசு கொடுத்ததை போன்று பிரச்சாரம் செய்வதுதான், அதன்மூலம் ஓட்டுகளை பெற முயற்சிக்கின்றனர். அதேபோல் துறைமுகம் தொகுதியை பொறுத்தவரையில் பாஜக தொண்டர்கள் விழிப்போடு இருக்க வேண்டும், இந்த தொகுதியில் அமைச்சர் யார் என்பது உங்களுக்கு அனைவருக்கும் தெரியும், இனிமேல் தான் அவர் தனது தேர்தல் வேலையை காட்டுவார். ஜனநாயக முறையில் தேர்தல் நடக்க வேண்டும்.

ஒவ்வொரு பூத்திலும் நமது ஏஜென்ட்கள் நமக்கான வாக்குகள் சிதறாமல் நமக்கு கிடைக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். இதேபோல் வாக்கு எண்ணும் போதும் சரியாக பூத் ஏஜெண்டுகளை அமர்த்தி நாம் விழிப்போடு இருக்க வேண்டும். துறைமுகம் என்பது பாஜகவுக்கு ஓட்டுவங்கி இருக்கிற ஒரு பகுதி, அதனால் காலையில் 7 மணிக்கே அனைவரும் வந்து வாக்களித்து விடுங்கள். பிறகு நமக்கான வாக்குகளை காலதாமதமின்றி போட வைத்து விடுங்கள். மிக முக்கியமாக இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு இனிமேல் தான் தன் முழு வேலைமையும் காட்டுவார். அமைச்சர் வரவில்லை, அவர் சீரியசாக இதை எடுத்துக் கொள்ளவில்லை, என்று பேச வைப்பார். அவர் பிஸியாக இருக்கிறார் என்றெல்லாம் கூறுவார்கள்.

ஆனால் என்னென்ன செய்ய வேண்டுமோ அதற்கான இன்ஸ்ட்ரக்க்ஷனை அவர் இனிமேல்தான் கொடுப்பார். வாக்குப்பதிவை பொருத்தவரையில் அமைதியாக நடக்கும், ஆனால் வாக்கு எண்ணும் போதுதான் என்ன நடக்கும் என்று கூற முடியாது. அதனால் பாஜக தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். காரணம் இது போன்ற விஷயங்களில் சேகர்பாபு கைதேர்ந்தவர். இவ்வாறு கராத்தே தியாகராஜன் பாஜக தொண்டர்கள் எச்சரித்துள்ளார்.