ஏற்கனவே இந்த விவகாரத்தில் சபாநாயகரே சிம்ளாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சட்டமன்றத்தில் இருந்து அனுப்பப்படும் தீர்மானங்கள் உடனே பரிசீலிக்கப்பட வேண்டும் என பேசி இருக்கிறார். 

சட்டசபைக்குள் நுழைந்தவுடன் நீட் விலக்கு மசோதாவுக்கு பாராமுகமாக இருந்து வரும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு வெளியேறும்படி கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் சொல்லி அனுப்பியதாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகளின் எதிர்ப்பு ஆளுநருக்கு தானே தவிர அவர் வாசித்த அறிக்கைக்கு அல்ல என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

பாஜக ஆட்சி அமைத்தது முதல் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதில் பெரும்பாலான திட்டங்களை தமிழகமும், தமிழக மக்களும் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அந்த வரிசையில் 2017 ஆம் ஆண்டு பாஜக கொண்டு வந்த நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவரை நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 15க்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை பரிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தின் பல்வேறு கட்சிகள் கோரிக்கை வைத்து வருகின்றன. அந்த வகையில் திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் நீட் தேர்வு விலக்கு மசோதா சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அது ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுத்து அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இதுவரை ஆளுநர் அந்த மசோதா மீது பாராமுகமாக இருந்து வருகிறார். ஆளுநரின் இந்த செயலை கண்டித்து திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதே நேரத்தில் நீட் விலக்கு மசோதாவை உடனே பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது ஆளுநர் பேசத் தொடங்கியவுடன் சட்டமன்றத்தில் இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள், அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றிய நீட் விலக்கு மசோதாவை இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி சட்டப்பேரவையை ஆளுநர் சிறுமைப்படுத்தியுள்ளார் என்றும், தமிழக மக்களையும், அரசியலமைப்புச் சட்டத்தையும அவமதிக்கும் ஆளுநரின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம் என முழக்கமிட்டு விடுதலைச் சிறுத்தை கட்சி உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இது பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவின் கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்ததற்கு திமுக விசிக உறவில் விரிசல் காரணமா என கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகை சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ். யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்துள்ள பேட்டியின் விவரம் பின்வருமாறு:- ஆளுநர் உரையில் இடம் பெற்றிருக்கிற அந்த சாரத்தை வரவேற்கிறோம் ஏன் என்றால் அது தமிழ்நாட்டு அரசினுடைய கொள்கை விளக்க உரைதான். ஆனால் அதை வாசிக்க வந்திருக்கிற ஆளுநரை நாங்கள் எதிர்க்கிறோம். இதே சட்டமன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஏகோபித்த ஆதரவோடு நீட் விளக்க மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஆளுநரின் மேசையில் இருக்கிறது, ஆனால் இதுவரை அவர் அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரின் இந்த செயல் இந்த சட்டமன்றத்தை அவமதிக்கும் செயல் என்பதை கண்டித்து தான் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்திருக்கிறோம்.

ஏற்கனவே இந்த விவகாரத்தில் சபாநாயகரே சிம்ளாவில் நடந்த சபாநாயகர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு சட்டமன்றத்தில் இருந்து அனுப்பப்படும் தீர்மானங்கள் உடனே பரிசீலிக்கப்பட வேண்டும் என பேசி இருக்கிறார். ஆக திமுகவும் ஆளநரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில் உறுதியாக இருக்கிறது. அந்த வகையில்தான் நாங்கள் எங்களது எதிர்ப்பை நேற்று தெரிவித்தோம். விசிகவின் எதிர்ப்பு ஆளுநரின் உரைக்கு எதிரானக அல்ல, ஆளுநருக்கு எதிரானது. இதைதான் எங்களது தலைவர் தொல்.திருமாவளவன் சட்டமன்றத்தை அவமதிக்கும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து விட்டு அவையில் இருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும் என எங்களுக்கு சொல்லியனுப்பினார். அதன்படி நாங்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளியேறினோம் என விளக்கம் அளித்துள்ளார்.