வன்முறையை தூண்டும் வகையில் பேசி வரும் எச் ராஜாவை கைது செய்யாவிட்டால் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மெரினாவில்  திரள்வோம் என தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் எச்சரித்துள்ளார்.  மோடி மற்றும் அமித் ஷாவுக்கு எதிராக  வன்முறையை தூண்டும் வகையில் பேசினார் என தமிழறிஞர் நெல்லைக் கண்ணனை போலீசார் கைது செய்துள்ளனர் .  அந்த வகையில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ,  தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ,  மனிதநேய ஜனநாயக கட்சி ,  எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சியின் கலந்து கொண்டனர்,  இதில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தலைவர்கள் ஆலோசித்தனர்.  ஆலோசனை கூட்டத்தில்  பேசிய தி. வேல்முருகன் நெல்லை  கண்ணனை கைது செய்வதில் காட்டிய அக்கறையை எச்.ராஜாவை கைது செய்வதிலும் தமிழகஅரசு காட்ட வேண்டும் என்றார்.  கல்லூரிக்குள் குண்டு வீசப்படும் என வன்முறையாக பேசியுள்ள  எச். ராஜாவை கைது செய்ய வேண்டும் இல்லையென்றால் அறிவிப்பின்றி தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஏராளமானோர் நாள் நேரம் அறிவிக்காமல் மெரினாவில் திரள்வோம்  என எச்சரித்துள்ளார். 

அப்போது பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கைது விவகாரத்தில் எச்ச ராஜாவுக்கு ஒரு நியாயம்,  தமிழறிஞர் நெல்லை கண்ணனுக்கு ஒரு நியாயமா எனக் கேள்வி எழுப்பினார்,   பாஜகவை கண்டு அதிமுக அச்சம் கொள்கிறதோ  என்ற சந்தேகம் தனக்கு எழுகிறது என்றார்,  " ஜோலியை முடிச்சுட்டா எல்லாம் சரியாயிடும் ''  என நெல்லை கண்ணன் பேசியது அதிகாரத்தை பறித்து விடுங்கள் என்ற அர்த்தத்தில்தான் என திருமாவளவன் விளக்கமளித்தார்.