போராட்டத்தின் போது பொதுச்சொத்துக்களை சேதப்படுத்துவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதில் தவறில்லை என பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

சென்னையில், நேற்று இல.கணேசன் பேட்டியளிக்கையில்;- குடியுரிமை திருத்த சட்டம் குறித்து, தவறாக தகவல்களை எதிர்க்கட்சியினர் பரப்பி வருகின்றனர். ஆனால், உண்மை நிலை தெரிந்த பின், போராட்டங்கள் குறையத் துவங்கி உள்ளன. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக, ஏற்கனவே, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் பேசியுள்ளனர். குடியுரிமை சட்டத்தை, மத்திய அரசு மறைமுகமாக எடுத்து வரவில்லை. இதுகுறித்து, தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார். 

மேற்கு வங்கம், கேரளா, ஒரிசா உள்ளிட்ட மாநில முதல்வர்கள் குடியுரிமை சட்டத்தை கொண்டு வரமாட்டோர் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். கொஞ்சம் பகுத்தறிவோடு சிந்திப்பவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்தை புரிந்து கொள்வர் என அவர் விமர்சனம் செய்துள்ளார். 

மேலும், போராட்டத்தைக் கலைக்க துப்பாக்கிச்சூடு நடத்தாவிட்டால் பொதுச்சொத்துகள் எந்த அளவுக்கு சேதமாகும், அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதைக் களத்தில் இருப்பவா்கள்தான் முடிவு செய்ய முடியும். துப்பாக்கிச் சூடு நடத்தாவிட்டால் பொதுச் சொத்துகள் அதிகம் சேதம் அடைந்திருக்கும். எனவே, அதிக சேதம் ஏற்படாமல் தடுக்க ஆயுதத்தைப் பயன்படுத்துவதில் தவறில்லை. தகுதியுடையவா்கள், உரிமையுடையவா்கள் சட்டரீதியாக ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அதில் தவறில்லை எனவும் பாஜக மூத்த தலைவா் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.