sholavandan mla press meet

இருவரும் ராஜினாமா செய்து விட்டு மக்களை சந்திக்கலாமா? அமைச்சர் உதயகுமாருக்கு சவால் விடும் சோழவந்தான் எம்எல்ஏ…

சசிகலாவை எதிர்த்து ஓபிஎஸ் தனி அணியாக வெளியேறிய போது அவருக்கு முதல் ஆளாக ஆதரவு அளித்தது மதுரை மாவட்டம், சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ மாணிக்கம்தான்.

இதனையடுத்து சசிகலா அணி சார்பில் மாணிக்கத்தை எவ்வளவோ விலை பேச முயன்றும் ஓபிஎஸ்க்கு பலத்த ஆதரவு அளித்து வந்தார். இதனைத் தொடர்ந்து சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பிலும் மாணிக்கம் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தார்.

பின்னர் மாணிக்கம் சொந்த தொகுதிக்கு திரும்பிய போது பொது மக்களும், தொண்டர்களும் உற்சாகமாக வரவேற்பளித்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம், தொகுதியில் வளர்ச்சிப் பணிகளை செய்ய விடாமல் தடுக்கும் முயற்சியில் அமைச்சர் உதயகுமார் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.

யூனியன் அலுவலகம் வந்த தன்னை அமைச்சரின் ஆதரவாளர்கள் உள்ளே நுழையவிடாமல் தடுப்பதாக மாணிக்கம் குற்றம் சாட்டினார்.

அமைச்சர் உதயகுமார் ராஜினாமா செய்யட்டும், நானும் ராஜினாமா செய்கிறேன், இருவருமே மக்களை சந்திக்கலாம், யாரை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பதைப் பார்ப்போம் என உதயகுமாருக்கு சவால் விடுத்தார் மாணிக்கம்.