கொரோனா காரணமாக பொறியியல் கல்லூரி மாணவர்கள் அரியரில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை ஏற்க முடியாது என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறித்துள்ளது.

கொரோனா தொற்று காலத்தில் தேர்வுகள் நடத்த முடியாத சூழலால் இறுதியாண்டு மாணவர்களை தவிர்த்து, இறுதி பருவத் தேர்வுகளைத் தவிர பிற பருவப்பாடங்களின் அனைத்து தேர்வும் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வின் போது, அரியர் தேர்வெழுத கட்டணம் செலுத்தி காத்திருந்த மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக மானியக்குழு, இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வழிகாட்டுதலின் படி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும், கலை-அறிவியல், பாலிடெக்னிக், பொறியியல் இளங்கலை முதுகலை படிப்புகளுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பால் பொறியியல் மற்றும் கலைக்கல்லூரிகளில் 1 முதல் 30 பாடங்கள் வரை அரியர் வைத்திருந்த மாணவர்கள் தேர்வு எழுதாமலேயே அந்த பாடங்களில் தேர்ச்சி பெறுகின்றனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அரியர் மாணவர்கள் போஸ்டர்களை ஒட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இந்நிலையில் தொழில்நுட்ப கல்விக்கான அனைத்து இந்திய கவுன்சில் ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘’பொறியியல் கல்லூர் மாணவர்கள் அரியரில் தேர்ச்சி பெற்றதாக அறிவித்ததை ஏற்க முடியாது. 1 முதல் 3 ஆண்டு மாணவர்களுக்கும், அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் தேர்ச்சி வழங்கமுடியும்? எனவே தமிழக அரசின் முடிவை ஏற்க முடியாது. லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்களை ஒரே அறிவிப்பில் தேர்ச்சி அடைய செய்ய முடியாது’’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.