மதுரை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு அதிமுக தலைமைக்கு கடும் அதிர்ச்சி கொடுத்துள்ளது. 2 அமைச்சர்கள் முகாமிட்டும் மாவட்ட ஊராட்சியை கைப்பற்ற நடந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. கார், பல லட்சம் பரிசு பேரம் பேசியும் கவுன்சிலர்கள் யாரும் மசியவில்லையாம். ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரை கைப்பற்ற மல்லுக்கட்டியும் முடியாமல் போனதுதான் பெரிய அதிர்ச்சியாக அமைச்சர்கள் நினைக்கிறார்களாம்.

அப்புறம் வாடிப்பட்டி ஒன்றிய தலைவர் இடத்துக்கு தேர்தலையே நடத்த முடியாமல் இழுபறியாக கிடக்கிறது. இந்த இரு ஒன்றியங்களுக்கும் ஒரு அமைச்சர் தான் மாவட்டச்செயலாளராகவும் இருக்கிறார்.

அங்கு அதிமுகவுக்கு சரிவு உண்டாக்கியுள்ள நிலையில், இன்னும் 4 நாளில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடக்கிறது. இந்த வீரவிளையாட்டை துவங்கி வைக்க முதல்வரை அமைச்சர் உதயகுமார் அழைத்துள்ளார். அதே நேரத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு, எடப்பாடி பழனிசாமி வருவது உறுதி இல்லை என்று முரண்பட்டு சொல்கிறார். தேர்தலில் அலங்காநல்லூரில் படுதோல்வி கண்ட நிலையில் அங்கு முதல்வர் வர தயக்கம் காட்டி வருகிறார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பான பேச்சாக உள்ளது.