அதிமுக -பாஜக கூட்டணியில் தேமுதிக இணைவது இழுபறியாகி வரும் நிலையில் திமுக கூட்டணிக்கு இழுக்க முயற்சிகள் நடைபெற்று வருவதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிகவுடன் கடந்த இரண்டு தினங்களாக பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையிலும் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வருகிறது. பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் ப்யூஸ் கோயல், முரளிதர ராவாகியோர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்த பின் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தங்களுக்கு 9 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என விஜயகாந்த் மனைவி பிரேமலதா பிடிவாதம் காட்டியதால் முடிவை எட்ட முடியவில்லை.

அதிமுக தரப்பு 5 தொகுதிகளை தேமுதிகவிற்கு ஒதுக்க முன் வந்துள்ளது. ஆனால், பாமகவுக்கு வடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு உள்ளது. அத்தோடு சாதி கட்சி என்கிற முத்திரையும் உள்ளது. எங்களது கட்சிக்கு தமிழகம் முழுவதும் தொண்டர்கள் உள்ளனர். பாமகவை விட அதிக வாக்கு வங்கியை வைத்துள்ள எங்களுக்கு பாமகவுக்கு ஒதுக்கியதை விட கூடுதல் இடம் ஒதுக்க வேண்டும் என தேமுதிக பிடிவாதம் காட்டி வருகிறது. அடுத்தடுத்து நடந்த பேச்சுவார்த்தையில், இரண்டு தொகுதிகளை விட்டுக் கொடுத்து பாமகவுக்கு ஒதுக்கியதைப் போல 7 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா சீட் கேட்டு வருகிறது தேமுதிக. அதற்கும் குறைவான சீட்டுக்களை ஒதுக்கினால்ன் பேச்சுவார்த்தைக்கே வரவேண்டாம் என கறாராக கூறி வருகிறார் பிரேமலதா. 

இதனால் அதிமுக ஒட்டுமொத்த கூட்டணி பற்றிய அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இயலாமல் திணறி வருகிறது. இந்நிலையில் தேமுதிகவுக்கு இருக்கும் ஓட்டு வங்கியை சிதறவிடாமல் கைப்பற்ற திட்டமிட்ட திமுக தங்களது கூட்டணிக்கு தேமுதிகவை இழுத்து வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதற்காக தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்த்தை அவரது வீட்டிற்கு சென்று சந்திக்க உள்ளார். அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை மும்மரன்மாக நடைபெற்று வரும் நிலையில் விஜயகாந்தை அவரது வீட்டிற்கு சென்று திருநாவுக்கரசர் சந்திக்க உள்ளது அதிமுக கூட்டணி கட்சிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.