தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிதியமைச்சர் ஓபிஎஸ் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார். இதில், சட்டப்பேரவையில் வாய்பிளந்த படியே அதிர்ச்சியடைந்து போயிருந்த மு.க.ஸ்டாலின், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு உச்சநீதிமன்றம் மற்றொரு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அணியில் இருந்த ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் பாண்டியராஜன், செம்மலை, சண்முகநாதன், மாணிக்கம், மனோகரன், மனோரஞ்சிதம், சரவணன், சின்னராஜ், ஆர்.நட்ராஜ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் அரசு தலைமை கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர்.

இதையடுத்து, ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை பதவி நீக்கம் செய்யக்கோரி திமுக கொறடா சக்கரபாணி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், சபாநாயகர் விவகாரத்தில் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த  விவகாரத்தில் கடந்த 3 ஆண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சபாநாயகர் காலதாமதம் செய்து வருவது ஏன் என கேள்வி எழுப்பியதோடு, இதுகுறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து சட்டப்பேரவை செயலாளர் பதிலளிக்க கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ஓபிஎஸ் உட்பட 11 பேரை தகுதி நீக்கம் செய்யக்கோரிய வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்று உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த வாதத்தை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர்.  ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது பற்றி சபாநாயகரே முடிவெடுக்கலாம், அவர் உரிய நடவடிக்கை எடுப்பார், எனவே இவ்விகாரத்தில் முடிவெடுக்க சபாநாயகருக்கு கால அவகாசம் எதுவும் விதிக்க முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

இந்நிலையில், சட்டப்பேரவையில் பட்ஜெட் உரையில் பல நலத்திட்டங்களை ஓபிஎஸ் படிக்க, படிக்க மு.க.ஸ்டாலின் கடுப்பில் இருந்து வந்தார். இதனிடையே, 11 எம்எல்ஏக்கள் வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்ததையடுத்து திமுக முகாமை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மேடைக்கு மேடை அதிமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மிகப்பெரிய ஆயுதமாக 11 எம்எல்ஏக்கள் வழக்கு பார்க்கப்பட்ட நிலையில் இது மு.க.ஸ்டாலினுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.