மெரினா கடற்கரை சாலையில் இருந்து நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டதில் சதி உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னை, கடற்கரை சாலையில் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக கம்பீரமாக நின்று கொண்டிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை இரவோடு இரவாக அகற்றப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.

இது நீதிமன்ற ஆணைப்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றாலும்கூட, இதன் பின்னணியில் சில சதிகள் அரங்கேற்றப்பட்டதை மறுக்க முடியாது என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சிவாஜி சிலையால் விபத்துகள் ஏற்படுவதாகவும், அதனால் அதை அகற்றக் கோரியும் 2006 ஆம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சிவாஜி சிலையை அகற்ற முடியாது என்று உயர்நீதிமன்றம் இடைக்கால தீர்ப்பளித்தது. 

2013 ஆம் ஆண்டு இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, சிவாஜி சிலையால் சாலை விபத்துகள் எதுவும் ஏற்படவில்லை என்றும், சிவாஜி சிலையை அகற்றத் தேவையில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்தது.

ஆனால், அடுத்த சில நாட்களில் தனது நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றிக்கொண்டு, சிவாஜி சிலையால்தான் விபத்துகள் ஏற்படுவதாகவும், எனவே சிலையை அகற்றலாம் என்றும் கூறியது.

இதனடிப்படையில், சிவாஜி சிலையை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சிலை அமைக்ப்பட்டு 7 ஆண்டுகளில் அப்பகுதியில் எந்த விபத்தும் ஏற்படாத நிலையில், விபத்துகள் ஏற்பட்டதாக பொய்யான தகவலை நீதிமன்றத்துக்கு வழங்கி சிலை அகற்றும்படி நீதிமன்றமே உத்தரவிடும் நிலையை ஏற்படுத்தியது அப்போதைய ஜெயலலிதா அரசு திட்டமிட்டு செய்த சதி என்று ராமதாஸ் கூறியுள்ளார். சிவாஜி சிலை இரவோடு இரவாக அகற்றியிருப்பது இரண்டாவது சதி என்றும் கூறியுள்ளார்.

சிவாஜி சிலையை அகற்றவதற்காகவே தமிழக அரசு திட்டமிட்டு பல நடவடிக்கைகளை எடுத்ததை அவரது ரசிகர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இப்போது கடற்கரை சாலையில் இருந்து அகற்றப்பட் சிலை, அவரது மணி மண்டபத்தில் வைக்கப்பட்டுவிட்ட நிலையில், அதேபோன்ற புதிய சிலை ஒன்றை தயாரித்து அதை மெரினா கடற்கரையில் காந்தி மற்றும் காமராஜர் சிலைகளுக்கு இடையில் நிறுவ வேண்டும் என்றும் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90 ஆவது பிறந்தநாள் வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அவரது புதிய சிலையை, அந்த நாளில் அரசு திறக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.