நடிகர் சிவாஜி கணேசனின் சிலை, மெரினா கடற்கரையில் வைக்க கோரிக்கை வைக்கப்பட்டால் அதனை தமிழக அரசு பரிசீலனை செய்யும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் அவரது ரசிகர்களால் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

சென்னை அடையாளில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி கணேசனின் திருவுருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செய்தார். அமைச்சர்கள், கடம்பூர் ராஜூ, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர், சிவாஜி கணேசனின் திருவுருவ படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 

இந்த விழாவில் சிவாஜி கணேசனின் குடும்பத்தார் கலந்து கொண்டனர். இதன் பிறகு, அமைச்சர் கடம்பூர் ராஜு, செய்தியாளர்களிடம் பேசும்போது, மெரினா கடற்கரையில் இருந்து சிவாஜி கணேசனின் சிலை எடுக்கப்பட்டதற்கும் அரசுக்கும் எந்தவித சம்பந்தம் இல்லை. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதாக பொது நல வழக்கு போடப்பட்டது. அதன் அடிப்படையில் நீதிமன்ற தீர்ப்பின்படி சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். மீண்டும் மெரினா கடற்கரையில் சிவாஜி கணேசன் சிலை வைப்பதற்கு கோரிக்கை வைக்கப்பட்டால் அதனை தமிழக அரசு பரிசீலிக்கும் என்று கூறினார். 

மெரினாவில் இருந்து சிவாஜி கணேசனின் சிலை அகற்றப்பட்டு, மணிமண்டபத்தில் வைக்கப்பட்டபோது, சிலையின்கீழ் பொறிக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் அகற்றப்பட்டது. இது குறித்து நடிகர் பிரபுவிடம், செய்தியாளர்கள் கேட்டபோது, சிவாஜி கணேசன் சிலையின்கீழ் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பெயர் விரைவில் பொறிக்கப்படும் என அரசு தரப்பில் உறுதி கொடுத்திருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார்.