Shiv Sena says BJP should garland EVMs for Gujarat victory if Hardik Patels allegations are true

குஜராத் தேர்தல் முடிவு வெளியானதை தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு மட்டுமின்றி மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கும் பா.ஜனதா மலர் மாலை போட வேண்டும் என்று சிவசேனா கிண்டலாக தெரிவித்துள்ளது.

சிவசேனா விமர்சனம்

குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா 99 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. காங்கிரஸ் 77 இடங்களில் வெற்றி பெற்று பா.ஜனதாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்தது.

இந்த நிலையில், ‘‘எதேச்சதிகார முறையில் நம்பிக்கை கொண்டிருப்பவர்களுக்கு இந்த தேர்தல் முடிவு ஒரு எச்சரிக்கை மணி’’ என்று பா.ஜனதாவை கூட்டணி கட்சியான சிவசேனா நேரடியாக சீண்டியது.

மலர் மாலை

இதைத்தொடர்ந்து, அக்கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் மீண்டும் பா.ஜனதாவை விமர்சித்து தலையங்கம் வெளியானது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:–-

ஹர்திக் பட்டேல் கூறியது உண்மையாகி விட்டது. குஜராத் தேர்தல் வெற்றிக்காக பிரதமர் மோடி மட்டுமின்றி, மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கும் பா.ஜனதா மலர் மாலை போட வேண்டும்.

உண்மையான வெற்றி

குஜராத்தில் பா.ஜனதா கட்சியால் 100 இடங்களை கூட தாண்ட முடியாமல் சரிவை சந்தித்த போதிலும், மும்பையில் சிலர் வெற்றியை கொண்டாடுகிறார்கள். இந்த வெற்றியின் உண்மையான அர்த்தத்தை அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை.

தேர்தலில் வெற்றி பெற ஆளும் கட்சி எந்த மட்டத்துக்கும் இறங்கும் என்பதை குஜராத் தேர்தல் முடிவு உணர்த்துகிறது. குஜராத்தில் 151 இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும் என்று மோடியும், 150–-க்கு மேற்பட்ட இடங்களில் வென்றால்தான், அது உண்மையான வெற்றி என்று அமித்ஷாவும் சூளுரைத்தார்கள்.

ஆனால், குஜராத் மக்கள் அவர்களுக்கு 100 இடத்தை கூட வழங்கவில்லை.

இவ்வாறு அதில் சிவசேனா தெரிவித்துள்ளது.