Shatrughan Sinha questions Narendra Modi over unbelievable tales against opponents

குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு புகார் விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு பா.ஜனதா எம்.பி.யான சத்ருகன் சின்ஹா பதிலடி கொடுத்து இருக்கிறார்.

மணிசங்கர் அய்யர்

குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக தொடங்கி உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கி பேசிவருகிறார்கள்.

முதல்கட்ட பிரசாரம் முடியும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் தரமற்ற வகையில் விமர்சித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மன்னிப்பு கேட்டபின்னும்...

இதற்காக அவரை இடைநீக்கம் செய்து காங்கிரஸ் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்தது. மணிசங்கர் அய்யரும் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டார்.

பிரதமர் மோடி அதன்பின்னர் நடைபெறும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் மணிசங்கர் அய்யர் பேச்சு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்.

பாகிஸ்தான் தலையீடு

இதற்கிடையில் குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு இருப்பதாக நேற்று முன்தினம் பரபரப்பு குற்றச்சாட்டை மோடி முன் வைத்தார். அதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்.பி. சத்ருகன் சின்ஹா பிரதமர் மோடியை டுவிட்டரில் நேரடியாகவே விமர்சனம் செய்து உள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறி இருப்பதாவது-

நம்ப முடியாத...

“தேர்தலில் எப்படியாவது வெற்றியை பெற்றுவிட வேண்டும் என்பதைவிட செயல்பாட்டில் வெற்றி பெறுவதுதான் இறுதியானது.

அதற்காக புதுசு புதுசா அறிவிப்பை கொண்டுவர வேண்டுமா, தேர்தல் வெற்றிக்காக ஆதாரமற்ற மற்றும் நம்பமுடியாத கதைகளை ஒவ்வொரு நாளும் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அவிழ்த்துவிட வேண்டுமா என்ன?.

நேரடியாக..

இப்போது அவர்களை பாகிஸ்தான் தூதர் மற்றும் ஜெனரல்களுடன் ஏன் தொடர்பு படுத்தவேண்டும்? இது வியக்கதக்கது. புதிய திருப்பங்கள், கதைகள் மற்றும் மூடிமறைப்பை தவிர்த்து நாம் கூறிய வாக்குறுதிகளின் அடிப்படையில் தேர்தலை நேரடியாக எதிர்க்கொள்ளலாமே.

வீட்டுவசதி, வளர்ச்சி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் மற்றும் குஜராத் வளர்ச்சி மாடலை வைத்து பிரசாரம் மேற்கொள்ளலாமே. மதவாத அரசியலை நிறுத்திவிட்டு ஆரோக்கியமான அரசியல் மற்றும் தேர்தலுக்கு செல்லலாம்” என சத்ருகன் சின்ஹா தன்னுடைய டுவிட்டரில் கருத்து தெரிவித்து உள்ளார்.