முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டிடிவி தினகரன் அணிக்கு வர, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடம் ரூ.5 கோடி பேரம் பேசியதாக ஸ்ரீ வைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பிளவுபட்ட அதிமுகவை இணைக்கும் பணி குறித்த பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 

இரு அணிகளும் விரைவில் இணையும் என்று இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் பேசி வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அதிமுகவின் இணைப்புக்கு சாத்தியமில்லை என்றும், ஊழல் அரசுக்கு துணை போவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் கூறியிருந்தார்.

அதேபோல் அணிகள் இணைப்பு குறித்து அமைச்சர்கள்தான் பேசிக் கொண்டிருக்கிறார்களே தவிர அதற்கான சாத்தியமே இல்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான ஸ்ரீ வைகுண்டம் எம்.எல்.ஏ சண்முகநாதன் டி.டி.வி. தினகரன், எடப்பாடி பழனிசாமி அணிக்கு வர பேரம் பேசியதாக புது குண்டை போட்டுள்ளார்.

சண்முகம் எம்.எல்.ஏ, தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், டிடிவி தினகரன் மற்றும் எடப்பாடி பழனிசாமியில் அணியில் சேர ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களிடம் ரூ.5 கோடி வரை பேரம் பேசியதாக தெரிவித்துள்ளார்.