தேவர் மகன் இரண்டாம் பாகத்திற்கு இன்னும் டைட்டில் முடிவு செய்யவில்லை என்றும் சாதிப் பெயரைக் குறிக்கும் வகையில் கண்டிப்பாக இருக்காது என்றும் கமல் ஹாசன் கூறியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன், கமல் ஹாசன், ரேவதி, கௌதமி நடித்த தேவர் மகன் திரைப்படத்தின் அடுத்த பாகம் வெளியாக உள்ளதாக கமல் தரப்பில் கூறப்பட்டது. தேவர் மகன் 2 என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.

 

நடிகர் கமல் ஹாசன், அரசியலுக்குள் நுழைந்த பிறகு, ஒரு கட்சியின் தலைவராக தன்னை முன்னிறுத்தி கொண்ட பிறகு, சாதி ரீதியான கதைகளில் நடித்து வருவது பற்றி பல்வேறு தரப்பினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர், சாதி ரீதியாக படம் எடுப்பதா? என்றும் அது போன்ற படங்களில் நடிப்பதன் மூலம் சாதியை உயர்த்தி பிடிக்கிறாரா? என்றும் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர், மக்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

 

இந்த நிலையில், தேவர் மகன் 2 பாகத்திற்கு டைட்டில் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் இரண்டாம் பாகத்திற்கு தேவர் மகன் என்று கண்டிப்பாக இருக்காது என்றும் கமல் கூறியுள்ளர். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல், பாலியல் தொந்தரவு அனைத்து துறைகளிலும் இருக்கிறது. இரண்டு தரப்பிலேயும் நியாயத்தை கேட்க வேண்டியுள்ளது. திரையுலகம் என்பதாலேயே பெரிதுபடுத்தப்படுகிறது.

 

 தேவர் மகன் இரண்டாம் பாகத்திற்கு டைட்டில் இன்னும் முடிவு செய்யவில்லை... தேவர் மகன் என்று கண்டிப்பாக இருக்காது. மது ஒழிப்பு குறித்து படமெடுத்தால், அதில் கதாநாயகனாக யார் இருப்பார்? மூலக்கரு ஒரு குடிகாரனாகத்தான் இருப்பார். நான் எடுக்கும் படங்கள் எல்லாம் சாதி ஒழிப்பு தொடர்பான கருத்துக்கள் கண்டிப்பாக இருக்கும். ஆளுங்கட்சியினர் என்னை விமர்சிப்பது நல்லது. முன்னேற்றத்திற்கான அடையாளம்தான் அது என்றார். சபரிமலைக்கு பெண்கள் செல்வது குறித்த கேள்விக்கு எல்லா இடத்திலேயும் பெண்களுக்கு சமமான இடம் இருக்க வேண்டும் என்பதே என் கருத்து என்று கமல் ஹாசன் கூறினார்.