மற்றொரு அமைச்சர் மீதும் பாலியல் புகாரை சுமத்த இருக்கிறாராம் தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல். ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமார் மீது பாலியல் புகார் கூறிய வெற்றிவேல், மணியான அமைச்சர் மீதும் பாலியல் புகாரை சுமத்த தயாராக உள்ளாராம்.

அமைச்சர் ஜெயக்குமார் தொடர்பாக ஆடியோ வெளியாகி சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், அவரைத் தவிர இன்னும் இரண்டு பேர் இருப்பதாகவும் அவர்களது பெயரை இப்போது சொல்ல முடியாது என்று தினகரன் ஆதரவாளரும், தகுதி நீக்கம் செய்யப்பட்ட அதிமுக எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேல் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.

குழந்தையின் டி.என்.ஏ.வையும், ஜெயக்குமார் டி.என்.ஏ.வையும் எடுத்து பார்த்தால் உண்மை தெரிந்துவிடும் என்றும் அப்பாவி பெண்ணை ஏமாற்றிய அமைச்சர் ஜெயக்‍குமாரை பதவி நீக்‍கம் செய்ய வேண்டும் என்றும் வெற்றிவேல் கூறியிருந்தார். என்னிடம் உள்ள ஆடியோவை வெளியிட்டால் ஜெயக்குமாருக்கு விபரீதம் ஆகிவிடும் என்றும் உரிய ஆவணங்கள் இல்லாமல் நாங்கள் குற்றச்சாட்டு கூற மாட்டோம் என்றும் வெற்றிவேல் தெரிவித்திருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆடியோ வெளியானது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் மறுப்பு தெரிவித்திருந்தார். குழந்தை பிறப்பு சான்றிதழ் ஒன்றும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில் குழந்தையின் அப்பாவின் பெயர் டி.ஜெயக்குமார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு அமைச்சர், உலகிலேயே என் பெயர் மட்டும்தான் டி.ஜெயக்குமார் என்றுள்ளதா? என கேள்வி எழுப்பியிருந்தார். அமைச்சர் மீது பாலியல் புகார் கூறப்பட்ட பெண் மீது தற்போது, தன்னை ஏமாற்றி விட்டதாக 3 பேர் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. 

சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்ட அந்த ஆடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மேலும் இரண்டு பேரை வெளியிடுவேன் என்று வெற்றிவேல் கூறியிருந்த நிலையில், வெற்றிவேல் தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மணியான அமைச்சர் ஒருவரின் அந்தரங்கம் குறித்து வெற்றிவேல் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் சம்பந்தப்பட்ட அந்த அமைச்சரின் வசூல் வேட்டையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து வெற்றிவேல், அந்த மணியான அமைச்சர் யார் என்பதை கூடிய சீக்கிரம் தெரிவிப்பேன். இருப்பதைதான் நான் சொல்கிறேன். எத்தனை அமைச்சர்கள் மீது இதுபோன்ற புகார்கள் உள்ளது என்பதை
கண்டிப்பாக சொல்வேன் என்கிறார்.