செட்டாப் பாக்ஸ் கொள்முதல் தொடர்பான டெண்டர் விவகாரம் தான் மணிகண்டன் – உடுமலை ராதாகிருஷ்ணன் மோதலின் உண்மையான பின்னணி என்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் கேபிள் ஆப்ரேட்டர்களையும் அரசு கேபிள் ஆப்பரேட்டர்களாக மாற்ற வேண்டும் என்பது தான் ஜெயலலிதாவின் கனவு. இடையே ஜெயலலிதா மறைவு காரணமாக இந்த விஷயம் அப்படியே கிணற்றில் போட்ட கல்லாக கிடந்தது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்த விவகாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தீவிரப்படுத்தினார். 

ஆனால், தனியார் கேபிள் நிறுவனங்கள் மூலமாக குறிப்பிட்ட ஒருவர் ஆதாயம் அடைந்து வந்த காரணத்தினால் இந்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டியும் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாமல் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து தான் எடப்பாடி இந்த விஷயத்தில் நல்ல அனுபவம் உள்ள உடுமலை ராதாகிருஷ்ணனை கேபிள் டிவி நிறுவன சேர்மனாக்கினார். உடுமலையும் பதவி ஏற்ற சில நாட்களிலேயே கேபிள் ஆப்பரேட்டர்களை அழைத்து உடனடியாக அரசு கேபிளுக்கு மாறுமாறு உத்தரவு பிறப்பித்தார்.

 

இந்த பின்னணியில் தான் அமைச்சராக இருந்த மணிகண்டன் உடுமலை 2 லட்சம் கேபிள் கனெக்சன் வைத்திருப்பதாகவும் அதை முதலில் அரசு கேபிளோடு இணைக்கப்பட்டும் என்று கொளுத்திப் போட்டார். ஆனால் அவர் கூறிய மற்றொரு விஷயம் பெரிய அளவில் கவனம் பெறாமல் போய்விட்டது. அது தான் வில்லட் செட்டாப் பாக்ஸ் தயாரிக்கும் நிறுவனம். இப்படி ஒரு நிறுவனத்தை உடுமலை ராதாகிருஷ்ணன் வைத்திருப்பதாக மணிகண்டன் கூறித்தான் பலருக்கும் தெரியவந்தது. 

இதன் பின்னணி குறித்து விசாரித்த போது தான், தமிழக அரசு சுமார் 40 லட்சம் செட்டாப் பாக்ஸ்களை அரசு கேபிள் ஆப்பரேட்டர்களுக்காக வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த டெண்டரை வில்லட் நிறுவனம் பெற மணிகண்டன் இடையூறாக இருந்ததாக கூறுகிறார்கள். எனவே தான் கேபிள் டிவி சேர்மனாக உடுமலை நியமிக்கப்பட்டதாகவும், இதனால் ஏற்பட்ட கோபத்தில் உடுமலையின் வில்லட் நிறுவனம் குறித்து மணிகண்டன் பேட்டி அளித்ததாகவும் கூறப்படுகிறது.

 

மிகப்பெரிய ஒப்பந்தம் தொடர்பாக சர்ச்சையை ஏற்படுத்த அமைச்சரே பேட்டி கொடுத்தது தான் அவர் பதவி நீக்கத்திற்கு காரணம் என்று பேசுகிறார்கள். இதனிடையே வில்லட் நிறுவனத்திற்கும் செட்டாப் பாக்ஸ் டெண்டருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று கோட்டை வட்டாரங்கள் பரபரப்பாக பேசிக் கொள்கிறது. ஏற்கனவே காதும் காதும் வைத்த மாதிரி செட்டாப் பாக்ஸ் டெண்டர் முடிந்துவிட்டதாகவும், இதற்கான கமிசன் வராதது தான் பிரச்சனை என்றும் கிசுகிசுக்கிறார்கள்.