அதிமுக எனும் கட்சியை மட்டும் அல்ல குடும்ப ஆதரவையும் டிடிவி தினகரன் முற்றிலும் இழந்துவிட்டார். சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன்னதாக அதிமுக துணைப் பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார். மேலும் வெங்கடேஷ் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். ஆனால் டிடிவி தினகரன் ஜெயலலிதா பாணி அரசியலை கையில் எடுத்தார். இதற்கு முதலில் கை மேல் பலனாக எம்எல்ஏக்கள் அவர் பின்னால் அணிவகுத்தனர். ஆனால் ஒரு கட்டத்தில் அமைச்சர்கள் டிடிவியை கைவிட்டனர். இந்த சமயத்தில் குடும்பத்தில் மூத்தவரான நடராஜன், திவாகரன் போன்றோரின் ஆலோசனைகளை பெற டிடிவி மறுத்துவிட்டார்.

உடல் நிலை சரியில்லாமல் இருந்த நடராஜனை சென்று சந்தித்து அவர் கூறுவது போல் நடந்து கொண்டால் கட்சியில் நம் ஆதிக்கத்தை நிலை நிறுத்த முடியும் என்று உறவினர்கள் கூறியதை டிடிவி ஏற்கவில்லை. இதனால் வெங்கடேஷ் அப்போதே தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார். மேலும் சசிகலாவிற்கு முதலமைச்சர் ஆசையை ஏற்றி அவரை சிறைக்கு அனுப்பியதே தினகரன் தான் என்று திவாகரன் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார். இதனை தொடர்ந்து நடைபெற்ற சமாதானப்படலத்தை தொடர்ந்து திவாகரன் மகனுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஆனால் நிர்வாகிகள் நியமனத்தில் திவாகரனின் ஆலோசனையை டிடிவி புறக்கணித்தார். இந்த நிலையில் சசிகலா வெளிப்படையாக தினகரன் ஆதரவு நிலைப்பாடு எடுத்தார். தனக்கும் திவாகரனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சிறையில் இருந்து கடிதம் எழுதினார். அந்த அளவிற்கு சசிகலா முழுக்க முழுக்க டிடிவியை நம்பினார். ஆனால் அதன் பிறகு நடந்த அனைத்துமே சசிகலா மற்றும் டிடிவி அரசியல் வாழ்வை முழுமையாக முடிக்கும் அளவிற்கு தான் இருந்தது. இந்த நிலையில் சசிகலா சிறையில் இருந்து விடுதலை ஆவதற்கான வாய்ப்புகள் தென்படத் தொடங்கியுள்ளன.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில் சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும். இதனை எதிர்கொள்ள தற்போதே அதிமுக தயாராகி வருகிறது. கடந்த வாரம் திடீரென அதிமுகவின் ஐவர் குழு அதிமுக தலைமை அலுவலகத்தில் கூடி மணிக்கணக்கில் ஆலோசனை நடத்தியது. இந்த நிலையில் மன்னார்குடியில் உள்ள சசிகலாவின் உறவினர்கள் திவாகரன் உள்ளிட்ட சிலர் மீண்டும் டிடிவியை ஓரம்கட்டுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறுகிறார்கள். சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால் இருக்கும் அரசியல் வாய்ப்புகள் குறித்து முக்கிய தகவல் முக்கிய நபர் ஒருவர் மூலமாக சிறைக்கு அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிறையில் இருந்து வெளியே வந்த உடன் அதிமுகவிற்கு உரிமை கோருவது என்பது தான் அதில் முதல் திட்டம் என்கிறார்கள். இதன் மூலம் அதிமுகவிற்குள் குழப்ப்ததை ஏற்படுத்தலாம் என்று சசிகலாவுக்கு ஆலோசனை சொல்லப்பட்டுள்ளது. ஆனால் அதிமுகவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும் எந்த செயலையும் சசிகலா செய்யமாட்டார் என்று சொல்லப்படுகிறது. அப்படி இல்லை என்றால் அதிமுகவில் தன்னுடைய அனுதாபிகளை தன் பக்கம் இழுத்து பொதுக்குழுவை மீண்டும் கூட்ட வைப்பதுஎ ன்கிறது மற்றொரு திட்டம் என்கிறார்கள்.

தற்போது ஓபிஎஸ் – ஈபிஎஸ் கட்சியை வழிநடத்தினாலும் பொதுக்குழுவை ஒரே ஒருமுறை மட்டுமே கூட்டியுள்ளனர். சசிகலா வந்த பிறகு பொதுக்குழுவை கூட்டினால் கட்சியின் எதிர்காலம் கருதி பலர் சசிகலாவிற்கு ஆதரவாக செயல்படக்கூடும் என்று மன்னார்குடி உறவினர்கள் நம்பகிறார்கள். இப்படிப்பட்ட சமயத்தில் மீண்டும் அதிமுகவை இரண்டாக உடைத்து பிறகு தேரதலுக்கு பிறகு தனது தலைமையின் கீழ் கொண்டு வந்துவிடலாம் என்றும் சசிகலாவிற்கு யோசனை கூறப்பட்டுள்ளது. ஆனால் இந்த அனைத்திற்கும் ஒரே ஒரு நிபந்தனை, தினகரனை உடன் வைத்துக் கொள்ளக்கூடாது என்பது தான்.

 

இதையும் படிங்க: “நான் ஏதாவது பண்ணிக்கிட்டால்”.... நெட்டிசன்களுக்கு வனிதா விடுத்த அதிரடி எச்சரிக்கை...!.

தினகரன் இல்லை என்று கூறினாலே நிர்வாகிகள் பலர் நம்முடன் வந்துவிடுவார்கள் என்றும் சசிகலாவிற்கு மன்னார்குடியில் இருந்து தகவல் சென்றுள்ளது. மேலும்தற்போது வரை நம்முடன் தொடர்பில் இருப்பவர்கள் என்கிற லிஸ்டும் அவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இப்படி மன்னார்குடியில் இருந்து தகவல்கள் சென்றாலும் சசிகலா எடுக்கும் முடிவு இத்தனை நாள் தமிழக அரசியலை கவனித்து வந்தவர் என்கிற அடிப்படையில் தான் இருக்கும் என்று சொல்கிறார்கள்.