serious discussion in ops home
கடந்த 4 மாதமாக பிளவுப்பட்டு இருந்த அதிமுகவின் இரு அணிகளும் இன்று மதியம் அதிமுக தலைமை அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி ஒன்று சேர இருக்கிறது.
ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் ஜெயலலிதாவின் மறைவில் உள்ள மர்மத்தை வெளியே கொண்டு வரவேண்டும். சசிகலா மற்றும் தினகரனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளை முன் வைத்தனர்.
இதில், சற்று குழப்பமான நிலையில் இருந்த எடப்பாடி அணியினர், ஒரு வழியாக சம்மதம் தெரிவிததனர். முதல் கட்டமாக டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தனர். ஆனால், சசிகலாவை நீக்குவது குறித்து எந்த பதிலும் இல்லை. இதனால், இந்த பேச்சு வார்த்தை இழுத்து கொண்டே சென்றது.
இதற்கிடையில், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி.தினகரனை நேற்று இரவு டெல்லி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இதை தொடர்ந்து இரவோடு இரவாக அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சசிகலா மற்றும் தினகரன் படங்கள், பேனர்கள் அதிரடியாக அகற்றப்பட்டன.
அதே நேரத்தில் இரு அணிகளும் இணைவது குறித்து நேற்று இரவு தனியார் ஓட்டலில் பேச்சு வார்த்தை நடந்தது. அதில், இன்று மதியம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இரு அணியினரும் பேச்சு வார்த்தை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. இதில் நத்தம் விஸ்வநாதன், பி.எச்.பாண்டியன், செம்மலை, கே.பி.முனுசாமி, மைத்ரேயன் உள்பட பலர் தங்களது கருத்துகளை பேசி வருகின்றனர்.
இதையொட்டி, இன்று மதியம் இரு அணிகள் இடையே நடக்க உள்ள பேச்சு வார்த்தைக்கு, உரிய ஏற்பாடுகளை செய்யவும், சசிகலா மற்றும் தினகரன் சம்பந்தப்பட்ட படங்கள் அனைத்து அகற்றப்பட்டுவிட்டதா என ஆய்வு செய்ய கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகம் சென்ற ஆய்வு செய்கின்றனர்.
இரு அணிகளும் இன்று பேச்சு வார்த்தை நடத்தி இணைய இருப்பதால், பல்வேறு பகுதிகளில் இருந்து அதிமுக தொண்டர்கள் அங்கு திரண்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
