கரூரை  சேர்ந்தவர்   முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி. இவர் டி.டி.வி.தினகரனின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், வலது கரமாகவும் செயல்பட்டு வந்தார். மேலும் தற்போது  அ.ம.மு.க.வின் கரூர் மாவட்ட செயலாளராகவும், மாநில அமைப்பு செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.

அரவக்குறிச்சி தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த இவர் பின்னர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு இடைத்தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்கிற முனைப்புடன் அரவக்குறிச்சி தொகுதியில் பல்வேறு இடங்களிலும் தொண்டர்களை சந்தித்து களப்பணிகள் ஆற்றி வருகிறார்.

இந்தநிலையில் டி.டி.வி.தினகரன் தன்னிச்சையாக முடிவு எடுத்து வருவதாக கரூர்  அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தொண்டர்களிடையே அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து செந்தில்பாலாஜி, அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணையப்போவதாக கரூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. இது தொடர்பாக செந்தில்பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, பதில் ஏதும் கூறவில்லை. அவர் மவுனம் காத்தார்.

இந்த நிலையில் இன்று காலை  கரூர் ராமகிருஷ்ணாபுரத்திலுள்ள தனது அலுவலகத்தில் செந்தில்பாலாஜி, தன்னுடன் நெருக்கமாக உள்ள ஆதரவாளர்களை திடீரென்று வரவழைத்து அமமுகவில் இருந்து விலகுவது குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், டி.டி.வி.தினகரன் எதிர்பாராத முடிவுகளை அறிவித்தால் அதற்கான மாற்று தீர்வு என்ன? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.

இது அ.ம.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் செந்தில்பாலாஜி இணைவதாக பரவிய தகவலை உறுதிப்படுத்தும் விதத்தில் இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். மேலும் வரும் 16 ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழா நாளன்று அவர் திமுகவில் இணையவுள்ளதாகவும்  தெரிகிறது.

இதுதொடர்பாக தி.மு.க. முக்கிய நிர்வாகிகளிடம் கேட்ட போது, இது உறுதிப்படுத்தப்படாத தகவல். செந்தில்பாலாஜி இணைப்பு என்பது, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து உறுதி செய்தால் தான் உண்மை என நம்பலாம். எனவே இதுபற்றி பேசுவது தவறு என்று கூறினர். இந்த சம்பவம் கரூர் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.