கரூர் மாவட்டத்தில் 1935 ல் பிறந்தவர் கே.சி.பழனிச்சாமி . ஆரம்பத்தில் கம்யூனிச இயக்கத்தில் இருந்த இவர் பின்னார் திமுகவுக்கு வருகிறார், திமுகவிலிருந்து மதிமுக விலகிய போது அங்கு சென்றவர் பின்னர் மீண்டும் தாய் கழகமான திமுகவுக்கே திரும்பி வந்தார் , கரூர் மாவட்டத்தில் திமுகவில் கே.சி.பி இல்லாவிட்டால் ஒரு அணுவும் அசையாது என்கின்ற அளவுக்கு செல்வாக்கு மிக்கவர்.

ஆரிய வைசிய செட்டியார் சமூக பிரமுகரான கேசிபி , அடிப்படையிலேயே வசதியானவர் . படிப்படியாக தொழில்துறையில் கால் பதித்த கேசிபி ,கொசு வலை மற்றும் நிட்டிங் தயாரிக்கும் கம்பெனிகளில் பெரிய அளவில் வளர்ந்தார்.

திமுகவில் இணைந்த பிறகு கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 2011 ல் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டார். அதிமுவின் செந்தில் நாதனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.
இந்த தேர்தலில் திமுக அதள பாதாளத்திற்கு சென்றது. 23 எம்.எல்.ஏக்களுடன் சுருங்கிய திமுகவில் கரூர் மாவட்டத்தில் இவர் மட்டுமே வென்றார். அவ்வளவு நெருக்கடியிலும் இவர் மட்டுமே வெல்ல காரணமாக இருந்தது இவரது பணபலமே.

ஆரம்பகாலத்திலேயே பெரும் பணக்காரராக விளங்கிய கேசிபி மேலும் செல்வந்தரான கதைக்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா ? ஏற்கனவே பணம் கொழித்த போதும் அதையும் தாண்டி தங்கச்சுரங்கமாக மணல் அள்ளும் தொழிலில் கொடிகட்டி பறந்ததே. அதில் இவர் செய்த சில வேலைகள் இவருக்கு தங்கச்சுரங்கமாய் பணத்தை அள்ளி கொட்டியது. அதுவே அவரை சிக்கலில் மாட்டியும் விட்டது. கம்பி எண்ண காரணமாகவும் அமைந்தது.
இவரது பலமே இரண்டு ஆட்சியிலும் இவர் தொழில் கொடி கட்டி பறந்ததே. அந்த அளவுக்கு அதிகார மையத்தின் அத்தனை கதவுகளும் இவருக்கு திறந்திருந்தது. மணல் அள்ளுதலில் சக்கை போடு போட்டு கொண்டிருந்த கேசிபியையும், மறைந்த மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனையும் எதிர்கட்சியாக இருந்த போது ஒரு சேர எதிர்த்து பட்டையை கிளப்பி லைம் லைட்டிற்கு வந்தவர் தான் செந்தில் பாலாஜி.

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இருவரும் வசிப்பது கரூர் நகரம் தான் . அரவக்குறிச்சையை பொறுத்தவரை இருவருமே மண்ணின் மைந்தர்கள் கிடையாது. மணல் காண்ட்ராக்ட் நிட்டிங்க் பேக்டரி மூலம் கோடிகளை அள்ளி குவித்துள்ள கேசிபிக்கும், அதிமுகவின் செந்தில் பாலாஜிக்கும் பணம் ஒரு பொருட்டெ இல்லை என்பதற்கு உதாரணம் தான் கடந்த சட்ட மன்ற தேர்தலில் தேர்தல் ஆணையமே ஆடிப்போய் தேர்தலை தள்ளிப்போட்டதுதான். இந்தியாவே அரவக்குறிச்சி தொகுதியை திரும்பி பார்க்க வைத்ததில் இந்த இருவரின் கைங்கர்யம் தான்.
செந்தில் பாலாஜிக்கு சலைத்தவர் அல்ல கேசி பழனிச்சாமி. இரண்டு பேர் மீதும் நடவடிக்கை இருக்கும், இரண்டு பேருக்குமே தத்தமது கட்சியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காது என ஹேஷ்யங்கள் கிளம்பின.
பலரது எதிர்ப்பார்ப்புகளையும் பொய்யாக்கிவிட்டு மீண்டும் களத்தில் குதித்துள்ளனர் இந்த பண முதலைகள். இன்றிலிருந்து அடுத்த 30 நாட்களுக்கு அரவக்குறிச்சி மக்களுக்கு கொண்டாட்டம் தான். அன்றைக்கு கொடுத்த பணம் அதோடு போச்சு . இனி தரப்போவதோ புதுசாக என்கின்றனர் விபரமறிந்தவர்கள். ஏற்கனவே லட்சாதிபதிகளாக மாறிய வாக்காளர்களுக்கு மீண்டும் அடிக்குது ராஜயோகம் என்கின்றனர் விபரமறிந்தவர்கள்.

கரூர் மாவட்டத்தின் நான்கு தொகுதிகளில் திமுக வெற்றிப்பெறும் என நம்பப்பட்ட தொகுதி அரவக்குறிச்சி காரணம் , தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி அரவக்குறிச்சி ஆகிய இடங்களிலுள்ள இஸ்லாமிய வாக்காளர்கள் பெரும்பாலும் திமுக ஆதரவு வாக்காளர்களாக மாறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. காரணம் முக்கியமான மமக, முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் கூட்டணியில் இருக்கின்றன என்பதால்.
ஆனால் அதையெல்லாம் அப்படியே தலைகீழாக தங்கள் பக்கம் மாற்றி காட்டினார் செந்தில் பாலாஜி. ஆனால் இப்போதிருக்கும் சூழ்நிலையில் திமுக இன்னும் பலமாக இறங்குகிறது. மற்றொரு புறம் கொங்கு ஈஸ்வரன் இணைந்துள்ளதால் திமுகவும் மல்லு கட்டுகிறது.

ஆனாலும் தான் வென்றால், அமைச்சர் ஆக வாய்ப்பு உள்ளது என்பதால் செந்தில் பாலாஜிக்கு இது வாழ்வா, சாவா போராட்டம். கொங்கு ஈஸ்வரன் இணைந்தாலும் செந்தில் பாலாஜி கொங்கு வெள்ளால கவுண்டர் என்பதால் அவர் சமூக ஆதரவு ஓட்டுகள் அவரை கைவிடாது.
எல்லாவற்றிற்கும் மேலாக சக்திமிக்க அமைச்சர்கள் தங்கமணி ,எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி, கேசி.கருப்பண்ணன் மற்றும் தம்பிதுரை களம் இறங்குவதால் கே.சி.பழனிச்சாமி செந்தில்பாலாஜியிடம் தாக்குப்பிடிப்பாரா? நவம்பர் 22 தேர்தல் தான் பதில் சொல்லும்.
